

தென்காசி: சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருந்த கடையநல்லூர் அங்கன்வாடி மைய கட்டிடம் காவல் ஆய்வாளரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது. கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அங்கன்வாடி மையத்தின் அருகில் சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தன.
அங்கன்வாடி மையம் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அங்கன்வாடி மையத்தின் சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருப்பதை சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
மேலும், அங்கன்வாடி மையத்தின் சுவர்கள் மோசமான நிலையில் இருந்ததால் அதனை சீரமைக்க காவல் ஆய்வாளர் ஆடிவேல் நடவடிக்கை எடுத்தார். தன்னார்வலர்கள் உதவியுடன் அங்கன்வாடி மையத்தின் சுவர்கள் சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டது. மேலும், போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள், திருக்குறள்கள், குழந்தைகளை கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டன. இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அங்கன்வாடி மையம் புதுப் பொலிவு பெற்றதால் குழந்தைகளும், சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.