

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விமானப் பயணக் கனவை தலைமை ஆசிரியர் நிறைவேற்றினார்.
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நெல்சன் பொன்ராஜ். இவர் தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த செலவில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்களை அழைத்துக்கொண்டு சென்னை செல்ல திட்டமிட்டார். அவர்களுடன் முன்னாள் மாணவர்கள் 7 பேரும், 2 பெற்றோர்களும் இணைந்து கொண்டனர். இவர்கள் கடந்த இன்று (மார்ச் 22) காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து மாணவ, மாணவிகள் உற்சாகமாக விமானம் ஏறினர். சென்னை சென்ற அவர்களை சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சைமன் ஜெயக்குமார் தலைமையில் சங்கத்தினர் வரவேற்றனர். பின்னர் மாணவர்கள் மின்சார ரயில் மூலம் வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு சென்றனர். அங்கே பகல் முழுவதும் மிருகங்களை கண்டு ரசித்தனர். சென்னையில் இருந்து இன்றிரவு முத்துநகர் விரைவு ரயில் மூலம் தூத்துக்குடி புறப்பட்டுச் செல்கின்றனர்.
விமான பயண கட்டணம் உள்ளிட்ட அனைத்துக்கும் ரூ.1.50 லட்சம் வரை செலவு செய்த தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜை ஊர் மக்கள் பாராட்டினர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், “தினமும் எங்கள் தலைக்கு மேலே விமானம் பறக்கிறது. அருகில் தான் ரயில் செல்லும் சத்தம் கேட்கிறது. ஆனால் நாங்கள் ஒரு நாளும் விமானத்திலும், ரயிலிலும் பயணம் செய்யவில்லையென என் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தெரிவித்தனர்.
விலங்குகளை பார்க்க வேண்டும் என்றால் வண்டலூர் உயிரியல் பூங்காதான் செல்லவேண்டும். ஆனால் எங்கள் வறுமையில் நாங்கள் எங்கே செல்ல முடியும் என்றனர். எனவே நான் எனது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை விமான நிலையத்தில் அழைத்துச் சென்றேன். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
காத்திருந்து வரவேற்றோம்: சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க தலைவர் வழக்கறிஞர் சைமன் ஜெயக்குமார் கூறும் போது, “ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தலைநகர் வரும் மிக முக்கிய விருந்தினர்களை நாங்கள் விமான நிலையத்தில் வந்து வரவேற்று இருக்கிறோம். ஒரு ஆசிரியர் தனது சொந்த செலவில் தனது மாணவ மாணவிகளோடு விமானத்தில் சென்னை வருகிறார் என்று முகநூலில் செய்தியை பார்த்தவுடன் ஆனந்தம் அடைந்தோம்.
காலையில் விமான நிலையத்தில் காத்திருந்து அவர்களை வரவேற்றபோது மிகவும் சந்தோஷமடைந்தோம். பள்ளி மாணவ மாணவிகளின் ஏக்கத்தை அறிந்த உதவி செய்த தலைமை ஆசிரியருக்கு நன்றியை தெரிவித்தோம். இவரை போல் மற்ற ஆசிரியர்களும் முன்வரவேண்டும்,” என்றார் அவர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், “முதல் முறையாக விமானத்தில் பறந்ததை எங்களால் மறக்க முடியாது. இந்த வாய்ப்பை தந்த எங்கள் தலைமை ஆசிரியருக்கு மிக்க நன்றி,” என்றனர்.
ஏற்கெனவே நெல்சன் பொன்ராஜ் கரோனா காலத்தில் தான் பெற்ற ஊதியத்தை கொண்டு இந்த பள்ளிக்கு ரூ.7 லட்சம் செலவில் கட்டிடம் கட்டியுள்ளார். மேலும் பள்ளியில் தனது சொந்த செலவில் டிஜிட்டல் திரையையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.