ஆர்.எஸ்.மங்கலம் அருகே 174 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 174 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

Published on

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனூரில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர், புலவர் கா.காளிராசா கூறியது: “ஆர்.எஸ்.மங்கலம் (ராஜசிங்கமங்கலம்) அருகில் உள்ள காவனூரில் மதுரை வீரன் சாமி கோயிலில் ஆய்வு மேற்கொண்டோம். அங்குள்ள கல்வெட்டை வாசித்ததில் 174 ஆண்டுகள் பழமையான இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி காலத்திய அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டு என்பது தெரிய வந்தது.

நடப்பட்டிருந்த கல்வெட்டில் எழுத்து உள்ள பகுதி மட்டும் துண்டாக உடைந்து கிடக்கிறது. இக்கல்வெட்டில் ஒன்றரை அடி உயரத்தில் ஒரு அடி அகலத்தில் 16 வரிகள் இடம் பெற்றுள்ளன. முதல் இரண்டு வரிகளும் இறுதி வரியும் கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளன. 1851- வது ஆண்டு, விரோத கிருது வருஷம் தை மாதம் 4-ம் நாள் என குறிப்பிப்பட்டுள்ளது.

இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி: கல்வெட்டின் இறுதியில் நயினார்கோயில் முத்துக்காத்தபதி என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. முத்துக்காத்தபதி என்பது ராமநாதபுரம் ஜமீன்தார் இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதியை குறிப்பிடுகிறது. இவர் ராணி பர்வத நாச்சியாரால் தன் வாரிசாக நியமிக்கப்பட்டவர். பெரும் புலவராகவும், தமிழ்ப் புரவலராகவும் விளங்கியவர். இவரது மகன் பாஸ்கர சேதுபதியே விவேகானந்தரை சிகாகோவுக்கு அனுப்பி வைத்த பெருமைக்குரியவர் ஆவார்.

இரண்டு கழுமரம் போன்ற தூண்கள் இக்கோயிலில் மதுரை வீரனாக வணங்கப்பட்டாலும் ஒரே வடிவில் இரண்டு தூண்கள் நடப்பட்டு, இரண்டின் கீழ் பகுதியில் மதுரைவீரன் சிற்பம் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. ஒரு தூணை மட்டும் நட்டு வணங்காமல் இரண்டும் ஒரே வடிவில் நடப்பட்டு வணங்கப்படுவதால், அன்றைய சூழலில் நேரடியாக மருது சகோதரர்களை வணங்க முடியாமல் இவ்வாறான ஏற்பாட்டை செய்திருக்கலாம் என்று கருத இடமுண்டு.

ஊர் மக்கள் இக்கோயிலை ஊர்க்காவலன் என்று வணங்குகின்றனர். இதுகுறித்து ஊர் மக்களிடம் விசாரித்தபோது ஊர் பொது நிகழ்வுகளுக்கு இக்கோயிலில் தேங்காய் உடைத்து வழிபடுவது மரபாக உள்ளதை அறிய முடிந்தது” என்று கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in