

சென்னை: இன்றைய சோஷியல் மீடியா யுகத்தில் வீடியோக்களுக்கும், அதை உருவாக்கும் கிரியேட்டர்களுக்கும் துளியும் பஞ்சம் இல்லை. இத்தகைய சூழலில் தமிழ்க் கடவுள் முருகன் உடன் இளைஞர் ஒருவர் தமிழில் உரையாடும் அனிமேஷன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இதன் பின்னணியில் இருப்பது லோகன் (Logan) என்கிற லோகநாதன் எனும் படைப்பாளி. தனது டிசைனிங் மற்றும் கிரியேட்டிவிட்டி திறனை கொண்டு அவர் இதை உருவாக்கி வருகிறார். அவரது படைப்புகள் அனைத்தும் கடவுள் முருகனுக்கும் சாமானிய இளைஞனுக்கும் இடையிலான உரையாடலாக உள்ளது.
முருகனை தன் தோழனாக கருதி, அவருடன் தனது உள்ளுணர்வுகளை பகிர்வது போல உள்ளது அவர் உருவாக்கியுள்ள ஒவ்வொரு வீடியோவும். அந்த வகையில் நட்புக்கே உரிய கேலி, கிண்டல், எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி, அறிவுரை என அனைத்தும் இந்த வீடியோக்களில் உள்ளது. இது பெரும்பாலான தமிழ் இளைஞர்களின் வாழ்வில் பொருந்தி போகும் வகையில் உள்ளது.
லோகநாதனின் இன்ஸ்டா டைம்லைனை பார்க்கும் போது ‘முருகன் அனிமேஷன்’ வீடியோக்களை கடந்த ஆண்டு முதல் தான் பதிவிட தொடங்கியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. இருப்பினும் அவருக்கு நெட்டிசன்கள் மத்தியில் அதீத வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது அண்மைய வீடியோ ஒன்று ‘முருகனுக்கு நீதி வேண்டும்’ என்பதை வலியுறுத்தும் விதமாக டைம் மெஷினில் பயணித்து சிவன் விநாயகருக்கு கொடுக்கும் ஞான மாம்பழத்தை பறித்து வருவது போல உள்ளது.