

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வீரிருப்பு கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரும், அவரது குடும்பத்தினரும் கடந்த 2000-ம் ஆண்டு புத்தர் கோயில் கட்டுவதற்கு வீரிருப்பு கிராமம் அருகே 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர்.
அந்த இடத்தில் நிப்போசன் மியொ ஹொஜி தமிழ்நாடு மற்றும் புத்த பிக்குகள், புத்த பிக்குனிகள் சார்பில் கோயில் கட்டப்பட்டது. அதனை தெடர்ந்து தென்னிந்தியாவில் முதன் முதலாக உலக அமைதிக்காக 120 அடி உயர கோபுரம் கட்டும் பணி தொடங்கியது.
உலக அமைதி கோபுர உச்சியில் கடந்த 2020 மார்ச் மாதம் 4-ம் தேதி புத்தரின் அஸ்தி வைக்கப்படும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து உலக அமைதி கோபுரத்தில் கடந்த 2023 மார்ச் மாதம் 26-ம் தேதி புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன. அதனை தொடர்ந்து உலக அமைதி கோபுரம் கட்டப்படும் பணிகள் நிறைவு பெற்று கோபுரம் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த நிப்போன்ஷன் மியோஹோஜி தலைமை புத்த துறவி கியொகோ இமாய் உலக அமைதி கோபுரத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சர்வ சமய வழிபாடு நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், எம்எல்ஏக்கள் ஈ.ராஜா (சங்கரன்கோவில்) டாக்டர் சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), சிவகங்கை சமஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல், தலைமை குற்றவியல் நீதிபதி கதிரவன், இந்தியாவுக்கான மங்கோலிய நாட்டு தூதர் கென்போல்டு டம்பாஜிவ், ஒகேனக்கல் அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தைச் சேர்ந்த ராமானந்த சுவாமிகள், மதுரை முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புத்த பிக்குகள், புத்த பிக்குனிகள், கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கரன்கோவில் புத்தர் கோயில் புத்த பிக்கு இஸிதானீஜீ, புத்த பிக்குனி லீலாவதி, புத்த பிக்குனி சிகுசா கிமுரா ஆகியோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.