Published : 05 Feb 2025 02:11 PM
Last Updated : 05 Feb 2025 02:11 PM

உணவு சுற்றுலா: சுட்ட தேங்காய்

பண்டிகைக் காலச் சிறப்புச் சிற்றுண்டிகள் ஒவ்வோர் ஊரிலும் உண்டு. பாரம்பரியமாகத் திருவிழா நாள்களில் மட்டும் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் ஆண்டு முழுவதும் நினைவில் நிற்கும். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் ஆடி மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் ’தேங்காய் சுடும்’ பண்டிகையில் தயாராகும் ’சுட்ட தேங்காய்’ மருத்துவக் குணங்களில் மேன்மையானது. சுவையோ சுண்டி இழுக்கும் தன்மையுடையது. சேலம், கரூர் போன்ற ஊர்களில் கொண்டாடப்படும் தேங்காய்ப் பண்டிகையின் சாரத்தையும் ஊட்டத்தையும் அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆடி மாதம் முதல் நாள் சேலம் மாவட்டத்துக்குள் நுழைந்தால், சுட்ட தேங்காயின் வாசம் வீசுவதை உணரலாம். ‘தேங்காயப் பண்டிகை’ காரணமாகப் பள்ளிகளுக்கு அன்று அரை நாள் விடுமுறை அறிவிக்க, சுட்ட தேங்காய் தயாரிப்பதற்கான பணிகள் வெகு மும்முரமாக நடைபெறும். பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை, வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட விழா இது! குடும்பங்கள் சூழ கூட்டம் கூட்டமாகத் தேங்காயைச் சுடும் நிகழ்வுகள் அரங்கேறும்.

வருடம் ஒருமுறைதான் இந்தச் சுட்ட தேங்காயைத் தயாரிக்க வேண்டும் என்றில்லை. மாதம் ஒருமுறை குடும்பமாகச் சேர்ந்து, குதூகலமாகத் தயாரித்து கிடைக்கும் ஆரோக்கியமான தின்பண்டத்தைச் சாப்பிடலாம்.

பச்சரிசி, அவல், பொட்டுக்கடலை, எள், பாசிப்பயிறு, நாட்டுவெல்லம்… என நுண்ணூட்டங்கள் நிறைந்த உணவுப் பொருள்கள் தேங்காய்க்குள் இடம்பெற, அவற்றை மொத்தமாகச் சுட்டு சாப்பிடுவது அலாதியான சுவை அனுபவத்தைக் கொடுக்கும். திருவிழா நாளன்று மட்டும் தயாரிக்கப்படும் சுட்ட தேங்காயை நாம் வீட்டிலேயே அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

எப்படித் தயாரிப்பது? - தேங்காயின் மேல் இருக்கும் நாரை நீக்கிவிட்டு, தேங்காயின் கண்களைத் துளைத்து, உள்ளிருக்கும் நீரை வெளியேற்ற வேண்டும். பச்சரிசி, அவல், பொட்டுக்கடலை, எள், பாசிப்பயிறு ஆகியவற்றை வாணலியில் வறுத்துக்கொள்ளவும். இவற்றோடு நாட்டுவெல்லம் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். பொடித்த பொருள்களைத் தேங்காயின் துளைக்குள் செலுத்த வேண்டும். பின்னர் தேங்காய்த் தண்ணீரைச் சேர்க்க வேண்டும்.

அழிஞ்சில், வாத நாராயணன், வேம்பு ஆகிய மரங்களின் குச்சியைத் தேர்ந்தெடுத்து, ஒரு முனையைக் கூர்மையாகச் சீவி தேங்காயின் துளைக்குள் பொருந்துமாறு செருக வேண்டும். நெருப்பில் வாட்டும் போது தேங்காய் கழன்றுவிடாமல் இருக்கும்படி குச்சியை நன்றாகப் பொருத்த வேண்டும். உலர்ந்த குச்சிகளைக் கொண்டு, மண் அடுப்பில் தீ மூட்டி தேங்காயைச் சுட வேண்டும். தேங்காயை வலமும் இடமும் முன்னும் பின்னும் எனச் சுழற்றிச் சுழற்றி தீயில் வாட்ட, தேங்காயின் முழுப் பகுதியும் நன்றாக வேகத் தொடங்கும்.

தேங்காயின் ஓடு தீப்பிடிக்கத் தொடங்குவது… ஓட்டில் கருமையான நிறம் தோன்றுவது… தேங்காய் ஓட்டில் வெடிப்புகள் தோன்றுவது… இவை தேங்காய் நன்றாக வெந்துவிட்டதற்கான அறிகுறிகள். சில நேரம் குச்சியிலிருந்து தேங்காய் கழன்று விழுவதும் நடக்கும்.

நெருப்பிலிருந்து எடுத்த சுட்ட தேங்காயை நன்றாக ஆற வைத்து, சுத்தியல் கொண்டு ஒட்டைத் தட்டி திறக்க வேண்டும். உள்ளே சேர்த்த உணவுப் பொருள்களின் கலவை தேங்காயோடு சேர்த்து வேக வைக்கப்பட்டதன் விளைவாகச் சிறப்பான உணவுப் பண்டமாக மாறியிருக்கும். வாசனையோ சுற்றமும் பரவி கமகமக்கும்!
சுட்ட தேங்காயின் பயன்கள்

எள், நாட்டு வெல்லம், அவல் இவை இரும்புச் சத்தை வாரிவழங்கும். பொட்டுக் கடலையும் பாசிப்பயிறும் புரதத் தேவைக்குத் துணை நிற்கும். தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் பல்வேறு நோய்களைத் தடுக்கும் சக்தி படைத்தது. வாய்ப் புண், வயிற்றுப் புண்களைப் போக்கும் சக்தியும் சுட்ட தேங்காய்க்கு உண்டு. மாலை வேளையில் வித்தியாசமான சிற்றுண்டியான சுட்ட தேங்காய் ஊட்டங்களையும் பரிசளிக்கும். சேலத்துக்குச் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் ஆடி முதல் நாளைத் தேர்ந்தெடுங்கள். அது உணவுச் சுற்றுலாவாகவும் அமையும்!

கட்டுரையாளர், சித்த மருத்துவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x