

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல் முறையாக கடலுக்கடியில் திருமணம் இன்று நடந்ததுள்ளது. சுமார் 40 நிமிடங்களில் கடலுக்கடியில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜான் டி பிரிட்டோ - தீபிகா. இருவரும் ஆழ்கடலில் திருமணம் புரிய முடிவு எடுத்தனர். இதையடுத்து ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் துணையுடன் இன்று புதுச்சேரி தேங்காய்திட்டில் இருந்து 5 கி.மீ தொலைவில் கடலுக்குச் சென்றனர். அங்கு 50 அடி ஆழத்தில் திருமண ஏற்பாடு நடந்தது. தென்னை ஒலையில் பூக்கள் இணைத்து திருமண நிகழ்வு நடக்கும். அதை கடலுக்கடியில் அமைத்து மோதிரம் மாற்றி திருமணம் புரிந்தனர்.
இது பற்றி இவர்கள் கூறுகையில், "கடல் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த திருமணத்தை ஒருவழியாக தேர்வு செய்தோம். நமது கடல்கள், கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்க இம்முறையில் திருமணம் செய்தோம். நீருக்கடியில் திருமணம் என்பது கடல் மாசுபாட்டின் சிக்கலை முன்னிலைப்படுத்த மற்றும் சிந்தனையைத் தூண்டும் வழியாகும். அதோடு, கடல் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க மற்றவர்களை ஊக்குவிக்கும் என நம்புகிறோம்" என்றனர்.
பயிற்சியாளர் அரவிந்த் கூறுகையில், “முதல்முறையாக நீருக்கடியில் திருமணம் நடந்தது. இவர்கள் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் என்பதால் இதில் சிரமம் ஏற்படவில்லை. முன் ஏற்பாடுகளுடன் சென்று திருமணம் புரிந்து முன்மாதிரியாக செயல்பட்டோம். தம்பதியுடன் மொத்தம் ஐந்து பேர் கடலில் இருந்தோம்” என்றார்.