

ஹைதராபாத்: அறுவை சிகிச்சை மூலம் பிறந்து, மூச்சு விட முடியாமல் தவித்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு கட்டத்தில் இதய துடிப்பு நின்றது. அந்த குழந்தைக்கு சிபிஆர் (மார்பில் கை வைத்து அழுத்தி சிகிச்சை அளிப்பது) செய்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிழைக்க வைத்து விட்டனர்.
தெலங்கானா மாநிலம், மேதக் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தைக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அக்குழந்தையையும், அதன் தாயையும் ஹைதராபாத் காந்தி அரசு மருத்துமனைக்கு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால், போகும் வழியிலேயே அக்குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சுவாசம் நின்றுபோனது.
உடனே, ஆம்புலன்ஸ் ஊழியர்களான நவீன் மற்றும் ராஜு ஆகியோர் அக்குழந்தைக்கு சிபிஆர் செய்தனர். இதன் பயனாக அக்குழந்தைக்கு நின்ற இதயம் மீண்டும் இயங்க தொடங்கியது. இதனை கண்டு அக்குழந்தையின் தாயும், உறவினர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ தற்போது தெலங்கானா மட்டுமின்றி, ஆந்திராவில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.