

கடலூர்: கடலூர் தென் பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா நடைபெற்றது. இதில் சாமிகளுக்கு தீர்த்த வாரி நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையின் 5-ம் நாளன்று ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து நதிகளிலும் கங்கை நீர் கலப்பதாக ஐதீகம். இதனால் அனைத்து நீர் நிலைகளிலும் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். கடலூர் தென்பெண்ணையாற்றில் இன்று (ஜன.18) ஆற்று திருவிழா கொண்டாடப்பட்டது.
இன்று காலை கடலூர் முதுநகர், வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, பச்சாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், ஆனைக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நானமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள்சிலைகள் அலங்கரிகப்பட்டு மேள தாளம் முழுங்கிட பெண்ணையாற்றுக்கு கொண்டு வரப்பட்டன.
ஆற்றில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், கடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், குடும்பத்துடன் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவையொட்டி தென்பெண்ணை ஆற்றங்கரையில் உணவு கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருள் கடைகள், பிளாஸ்டிக் கடைகள், ராட்டினங்கள், குறிப்பாக ஆற்றுத்திருவிழாவில் மட்டுமே விற்கப்படும் சுருளிக்கிழங்கு கடைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆற்றுத்திருவிழாவை முன்னிட்டு 300-க்கும மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.