

நாட்டினக் காளை வளர்ப்பை ஊக்குவிக்க, பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு சிறப்பு பரிசாக மதுரை இளைஞர் ஒருவர் 6-வது ஆண்டாக கன்றுடன் கூடிய ரூ.1 லட்சம் மதிப்புள்ள ‘காங்கயம்’ பசு பரிசு வழங்கியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு, ஜல்லிக்கட்டுக்கும், நாட்டினக் காளைகளுக்கும் தனி மவுசு ஏற்பட்டுள்ளது. அதனால், தற்போது நாட்டின காளைகள் வளர்ப்பு அதிகரித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற அலங்காநல்லூரை சேர்ந்த பொன்குமார் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதால், அந்த போராட்டத்துக்குப் பிறகு நாட்டினக் காளைகள் வளர்ப்பை ஊக்குவித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதோடு நிற்காமல், ஒவ்வொரு ஆண்டும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு சிறப்பு பரிசாக கன்றுடன் கூடிய ரூ.1 லட்சம் மதிப்புள்ள காங்கயம் பசு மாட்டை வழங்கி வருகிறார். இந்த ஆண்டும் வழக்கம்போல நேற்று ரூ. 1 லட்சம் மதிப்புள்ள காங்கயம் நாட்டின பசு மாட்டை வழங்கினார். இதுகுறித்து பொன்குமார் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டினக் காளைகள் அதிகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2020 முதல் பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு 2-வது பரிசாக ரூ. 1 லட்சம் மதிப்புள்ள காங்கயம் பசுங்கன்று வழங்குகிறேன்.
இவ்வாண்டு 3 ஜல்லிகட்டு போட்டிகளிலும் பங்கேற்க 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை பதிவு செய்தனர். பெரும்பாலும் இக்காளை உரிமையாளர்கள் வீடுகளில் நாட்டின மாடு வளர்ப்பது இல்லை. பால் அதிகம் கறப்பதில்லை என்ற காரணத்தால் வளர்க்க தயங்குகின்றனர்.
ஜல்லிக்கட்டில் கலப்பின காளைகளுக்கு அனுமதி இல்லை. காங்கயம், உம்பள சேரி, தேனி, வத்திராயிருப்பு மலைமாடு காளைகளே அதிகமாக பங்கேற்கின்றன. காங்கயம், நாட்டின பசு வளர்ப்பு, உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஜல்லிக் கட்டை போராடி பெற்றோம். நமது நாட்டின மாடுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.