

காளைகளை அடக்குவதற்காக 19 வயது வரும் வரை காத்திருந்தேன். பங்கேற்ற முதல் போட்டியிலேயே பரிசு வென்றது மகிழ்ச்சியாக இருப்பதாக பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபன் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது: “எனக்கு பெற்றோர் இல்லை. 19 வயதுக்காக காத்திருந்தேன். அதற்கு முன்பு 2 ஆண்டுகள் வடமாடு மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்று பயிற்சி பெற்றேன். எனது மாமா பாரதி மற்றும் உறவினர்கள் அளித்த உற்சாகத்தில் முதல்முறையாக பங்கேற்று கார் பரிசு பெற்றது சந்தோஷமாக உள்ளது. எனக்கு ஓட்டுக்கூரை வீடு தான் உள்ளது. நான் தேங்காய் மட்டை உரிக்கும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு பரிசாக கிடைத்த கார் மூலம் வருவாயை பெருக்கி சொந்த வீடு கட்ட முயற்சிப்பேன். சிலர் படித்து ஊருக்கு பெருமை சேர்ப்பர். நான் வீரவிளையாட்டில் பங்கேற்று ஊருக்கு பெருமை சேர்த்துள்ளேன்” என்று கூறினார்.
சிறந்த காளைக்கான முதல் பரிசு பெற்ற தீபக் (25) கூறுகையில், “பிஎஸ்சி கணினி அறிவியல் படித்துள்ளேன். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு காளைகளை வளர்க்க தொடங்கினேன். ஜல்லிக்கட்டு மூலம் நாட்டினக் காளைகள் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றன. அதன் மூலம் நமது பாரம்பரியம் காக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பில் உறுதுணையாக இருந்த எனது தாய் விஜயா இறந்துவிட்டார். எனவே எனது தாய் விஜயா மற்றும் தந்தை தங்கப்பாண்டி பெயரில் காளைகளை அவிழ்த்து விடுவது வழக்கம். 2022-23-ம் ஆண்டு ஜல்லிக்கட்டில் பரிசு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். மிகத் தாமதமாக தற்போதுதான் கிடைத்துள்ளது. எனது மாமா, சகோதரர்கள் காளைகள் வளர்க்க முழு ஒத்துழைப்பு தருகின்றனர்” என்றார்.
மாடுபிடி வீரர்களில் 2-ம் இடம் பிடித்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசிராம் கூறுகையில், “மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளேன். எனது உறவினர்கள், நண்பர்கள் ஜல்லிக் கட்டில் மாடுபிடி வீரர்களாக இருந்து வீரமரணம் அடைந்தனர். அவர்களது நினைவைப் போற்றவும், அவர்கள் எனது ஊருக்கு தேடித்தந்த பெருமை தொடர வேண்டும் என்ற வைராக்கியத்திலும் காளைகளை அடக்க வந்தேன். என்றார். அவரது தந்தை கூறுகையில் நான் விவசாய கூலித்தொழிலாளி. எனது மகனை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளேன். தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்” என்றார்.