திண்டுக்கல் மாவட்டத்தில் குறையும் ஜல்லிக்கட்டு போட்டிகள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் குறையும் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 17 கிராமங்களில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு 7 ஆக குறைந்தது. அரசின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பாரம்பரியமாக உலகம்பட்டி, கொசவபட்டி, மறவபட்டி, புகையிலைப்பட்டி, நல்லம நாயக்கன்பட்டி, தவசிமடை, நத்த மாடிப்பட்டி, என்.அய்யாபட்டி, சொறிபாறைப்பட்டி, கே.ஆவாரம்பட்டி, ஏ.வெள்ளோடு, பி.கலையம்புத்தூர், அய்யம்பாளையம், பில்லம நாயக்கன்பட்டி, உலுப்பகுடி, ஆண்டிபட்டி, என்.கோவில்பட்டி ஆகிய 17 கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. புதிதாக ஜல்லிக்கட்டு நடத்த சில கிராமத்தினர் அனுமதி கேட்டபோதும் அதை மாவட்ட நிர்வாகம் ஏற்கவில்லை. இந்நிலையில், சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் கிராமங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.

அரசு அனுமதி இருந்தும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் பல கிராமங்கள் பின்வாங்கின. இதனால் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் கிராமங்களின் எண்ணிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு 12 ஆக குறைந்தது. கரோனா பாதிப்பு கால கட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் கிராமங்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது.

தற்போது ஜல்லிக்கட்டு காளைகள், வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு, குறிப்பிட்ட நேரத்துக்குள் போட்டியை நடத்தி முடிக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை அரசு விதித்து வருகிறது. இவற்றை முழுமையாக கடைப்பிடிக்க அதிக செலவு ஆவதால் போட்டிகளை நடத்த முடியாமல் கிராம விழா குழுவினர் சிரமப்படுகின்றனர்.

இதன் காரணமாக கடந்த ஆண்டில் 7 கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு அதைவிட குறைவான கிராமங்களிலேயே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது வரை பழநி அருகேயுள்ள கலையம்புத்தூர், நத்தம் அருகேயுள்ள கொசவபட்டி, நத்தமாடிப்பட்டி, தவசிமடை ஆகிய 4 கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளனர்.

அதிகாரிகள் கடந்த ஆண்டு காட்டிய கெடுபிடி காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கடிதம் அளிக்கக்கூட சில கிராம விழா குழுவினர் தயங்குகின்றனர். அதனால் ஜல்லிக்கட்டு நடத்தும் கிராமங்களின் எண்ணிக்கை மேலும் குறையும் என்ற நிலை உருவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in