

விழுப்புரம்: செஞ்சியில் 110 ஆண்டுக்கு முன்னர் பிரிட்டிஷ் தளபதி ஒருவர் தனது செல்ல நாய்க்கு கல்லறை அமைத்துள்ளார். சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற காலக்கட்டத்தில் செஞ்சியும் காலனி ஆதிக்கமான பிரிட்டீஷாரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அப்போது இப்பகுதியை ஆட்சி புரிந்த பிரிட்டிஷ் தளபதிகளுக்கு செஞ்சி பகுதி சுற்றுலா தளம் போல இருந்தது. கோடை வெயிலில் குதிரையில் ஏறி ராஜா கோட்டையின் உச்சிக்கு என்றால் அங்கு குளிர் காற்று கிடைக்கும். இதனால் செஞ்சியில் குடும்பத்துடன் தங்கிய பிரிட்டிஷ் தளபதிகள் தங்களின் வளர்ப்பு பிராணிகளையும் உடன் அழைத்து வந்தனர்.
அந்த வகையில் இன்று செஞ்சி - திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பயணியர் விடுதியின் உள்ளே 110 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட அந்தச் செல்லப் பிராணியின் கல்லறை குறித்த விவரங்கள் பின்வருமாறு: செஞ்சி என்றாலே வீரத்திற்கு புகழ் சேர்க்கும் ராஜா தேசிங்கு கோட்டைதான். ஒரு மனிதனுக்கும் வளர்ப்பு பிராணிக்கும் இடையேயான பாசப்பிணைப்பு மண்ணில் புதைந்து கிடக்கிறது. ராஜா தேசிங்கு ஆட்சி செய்த செஞ்சியில் 1910-ம் ஆண்டு முதல் ஆங்கிலேய அதிகாரியாக பொறுப்பேற்று அதிகாரம் செலுத்தி வந்தார். அபோது அவர் பிரண்டா (Brenda) என்ற நாயை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். அதன்பிறகு அந்த நாய் 1914-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி உயிரிழந்துள்ளது.
தான் செல்லமாக வளர்த்த பிரண்டா நாயை பிரிய மனமில்லாமல் துடித்த அந்த பிரிட்டிஷ் தளபதி, தான் வாழ்ந்த அந்த இடத்திலேயே தான் உயிருக்கு உயிராக வளர்த்த செல்லப் பிராணியான பிரண்டா நாய்க்கு கல்லறை அமைத்து அதன் மீது (பிரண்டா எ டியர் டாக்) (Brenda A Dear Dog) என எழுதி வைத்து வணங்கி மரியாதை செலுத்தியுள்ளார்.
தற்போது அந்த இடம் செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையோரம் உள்ள நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பயணியர் விடுதியாக செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தில் உள்ள பிரண்டா என்று அழைக்கப்பட்ட நாய் கல்லறை இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. நாயின் பெயர் கல்லறையில் இருக்கிறது. ஆனால், அதை வளர்த்து வந்த அந்த ஆங்கிலேய அதிகாரியின் பெயரோ, அடையாளமோ எங்குமில்லை. நாய்களின் நன்றிக்கும், மனிதர்களின் பாசத்திற்கும் ஈடு இணையே இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டுதான் பிரண்டா.