மதுரை உயர் நீதிமன்ற கிளை வளாகத்தில் நூற்றாண்டு பழமையான ‘கல் செக்கு’

மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தில் காணப்படும் கல் செக்கு
மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தில் காணப்படும் கல் செக்கு
Updated on
1 min read

மதுரை: மதுரை உயர் நீதிமன்ற கிளை வளாகத்தில் நூற்றாண்டுகள் பழமையான கல் செக்கு காணப்படுகிறது. இந்த கல்செக்கை ஆய்வுக்குட்படுத்தினால் பல்வேறு வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கச்சிராயன்பட்டியில் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து பொறித்த கல்வெட்டு கொண்ட கல்செக்கு முன்பு கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் கேசம்பட்டி அய்யனார் கோயில் பகுதியில் கல் செக்கு இருந்ததும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான கல் செக்கின் உரல் பாகம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் தற்போது உள்ளது. இப்பகுதி ஏற்கெனவே ஏரியாக இருந்த பகுதி என்பதால் இங்கு பயன்பாடற்ற உரலைக் கொண்டு வந்து போட்டார்களா? அல்லது இப்பகுதியில் கல்செக்கு பயன்பாட்டில் இருந்ததா என்பதை விரிவான ஆய்வுக்கு பிறகே தெரிந்து கொள்ள முடியும்.

இது குறித்து சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் அறிவு செல்வம் ஆகியோர் கூறியது: “கல் உரலில் தாவர வித்துகளை கொட்டி உலக்கையை இணைத்து அத்துடன் மாடுகளையும் இணைத்து உரலை சுற்றி வருமாறு அமைத்து வித்துக்களில் இருந்து எண்ணெய்யை பிழிந்து எடுக்கப்படும் ஒரு அமைப்பே செக்கு. பழங்காலத்தில் இரவில் தீப்பந்தங்களுக்கும் கோயில்களில் விளக்குகள் எரிக்கவும் அதிக அளவு தாவர எண்ணெய்கள் தேவைப்பட்டதால் இந்த அமைப்பு உருவாகி இருக்கலாம்.

தமிழகத்தில் பாறை கற்களால் ஆன செக்கு 1200 வருடங்களுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது. இவை அரசுகளின் வருவாய் வழிகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. அரசு அனுமதி பெற்றே இதனை பயன்படுத்த முடியும். இதனைப் பற்றி முதலாம் பராந்தக சோழர் கால கல்வெட்டு, பல்லவர் செப்பேடு, திருவாய்மொழி, பெரியபுராணம் போன்றவற்றில் இருந்து செக்கு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

செக்கை ஆட்டி எண்ணெய் எடுப்பவர்களுக்கு செக்கார், செட்டி, வானியர் என்றும் தொழிலின் பெயரால் செக்கு வாணியர் என்றும் இவர்கள் உபயோகிக்கும் மாடுகளின் எண்ணிக்கையை பொறுத்து ஒத்தை செக்கான், இரட்டை செக்கான் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.எருது பூட்டி செக்காட்டும் சிற்பம் கிபி 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தாராசுரம் பெரிய கோயில் வளாகத்தில் உள்ளது. செக்கு ஆட்டும் இடத்தில் தெய்வங்கள் உறைவதாக நம்பிக்கை இருநந்துள்ளதை செக்காட்டி கருப்பன் என்ற தெய்வத்தின் பெயரின் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது.

இதுவரை கல்லால் ஆன செக்கு உரல் மட்டுமே ஆய்வில் கிடைத்துள்ளன. உலக்கை கல் அல்லது மரத்தால் செய்யப்பட்டிருக்கலாம். மின்சாரம் வந்த பிறகு கல் செக்கின் பயன்பாடு குறைந்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது தமிழகத்தில் கல் செக்கில் எடுக்கும் எண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளை வளாகத்தில் காணப்படும் கல் செக்கை ஆய்வுக்குட்படுத்தினால் பல்வேறு வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம்,” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in