Published : 28 Jul 2018 14:16 pm

Updated : 28 Jul 2018 14:16 pm

 

Published : 28 Jul 2018 02:16 PM
Last Updated : 28 Jul 2018 02:16 PM

உலகக் கோப்பை நாயகர்கள் - மாட்ரிக்: நிராகரிப்பில் உயிர்பெற்றவன்

உலகம் எப்போதுமே வெற்றி பெற்றவர்களையே பெரிதாகப் பேசும். விதிவிலக்காக, உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் இறுதிப் போட்டிவரை அதிரடியாக முன்னேறிய குரேஷியாவைப் பற்றி உலகம் பேசியிருக்கிறது. கோப்பை வென்ற ஃபிரான்ஸ் அணியின் இளம் வீரர் கிளியன் எம்பாப்பே ஆச்சரியத்துடன் கொண்டாடப்படுகிறார். அவருடன், சேர்த்துக் கொண்டாடப்பட வேண்டியது கோப்பையைப் பறிகொடுத்த குரேஷியாவின் கேப்டன் லூகா மாட்ரிக்கின் கதை.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனல் மெஸ்ஸி, நெய்மர் போன்ற நட்சத்திர வீரர்களின் பெயர்கள் திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் நேரத்தில் மாட்ரிக் போன்றவர்களின் ஆட்டம் கண்டுகொள்ளப்படாமல் போவதுதான் வழக்கம். நல்ல வேளையாக, இந்த முறை அப்படி நடக்கவில்லை. இதுவரை கவனம் பெறாத மாட்ரிக்கின் மேதமை, இந்த உலகக் கோப்பையில் வெளிப்பட்டது. பதினைந்து ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த அவருடைய திறமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


குரேஷியாவின் தூண்

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளில் 10-ம் நம்பர் ஜெர்சி லேசுபட்டது அல்ல. எந்த அணியில் என்றாலும், 10-ம் நம்பர் ஜெர்சி நட்சத்திர வீரர்களுக்கே வழங்கப்படும். நடந்து முடிந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் உலகை வியக்கவைத்த குரேஷிய அணியில் 10-ம் நம்பர் ஜெர்சியைப் பெற்றிருந்தவர் மாட்ரிக். அதற்குக் காரணம் கால்பந்தை எளிமையாகவும் நடைமுறைக்கு உகந்த வகையிலும் அவர் ஆடியதுதான்.

கடந்த ஒரு மாதத்தில் வேறு எந்த குரேஷிய வீரரைவிட அதிகத் தொலைவுக்கு ஓடியவர் மாட்ரிக். அணியின் மற்ற வீரர்களைவிடப் பந்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரும் அவர்தான். பந்தைக் கடத்துவதில் மட்டும் ஸ்பானியர்களைவிடச் சற்றே பின்தங்கியவராக அவர் இருந்தார். அதிகம் ஃபவுலுக்கு உள்ளான குரேஷிய வீரரும் அவரே.

இப்படித்தான் ஆட வேண்டும்

உலகக் கோப்பையில் மற்ற நட்சத்திர வீரர்களுக்கு நடந்ததுதான் மாட்ரிக்குக்கும் நிகழ்ந்தது. சொந்த மைதானத்தில் உற்சாகம் கரைபுரள ஆடிய ரஷ்யாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் அதிகம் ‘ஃபவுல்' செய்யப்பட்ட வீரர் அவர்தான். இதனால் மாட்ரிக் பின்வாங்கிவிடவில்லை. ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும் 48,000 ரசிகர்கள் முன்னிலையில் குரேஷிய அணியைக் காப்பாற்றினார்.

குரேஷியா கோல் அடிக்கக் காரணமானார். இந்தப் போட்டிக்குப் பிறகு, "இப்படித்தான் கால்பந்தை விளையாட வேண்டும். இப்படித்தான் கால்பந்தை உணர்ந்துகொள்ளவும் முடியும்" என்று அர்ஜென்டினாவின் பிரபலக் கால்பந்து எழுத்தாளர் ஜோர்ஜ் வால்டானோ, மாட்ரிக்கைப் பாராட்டி எழுதினார்.

ஊசலாடிய வாழ்க்கை

நீண்டகாலம் நிராகரிக்கப்பட்டு, ஏளனம் செய்யப்பட்ட பிறகு இப்போதுதான் ரசிகர்களாலும் அணியின் சக வீரர்களாலும் அவர் கொண்டாடப்பட ஆரம்பித்திருக்கிறார். இந்த இடத்தில்தான் மாட்ரிக் வளர்ந்த பின்னணியை அறிய வேண்டியது முக்கியமாகிறது. யூகோஸ்லாவியாவுக்கு எதிரான குரேஷிய விடுதலைப் போராட்டத்துக்கான போர் உச்சத்தில் இருந்த காலத்தில், தன் பள்ளிக் காலத்தைக் கழித்தவர் மாட்ரிக்.

அந்தப் போரில் மாட்ரிக்கின் தாத்தா செர்பியர்களால் மோசமான முறையில் கொல்லப்பட்டார். மாட்ரிக் வாழ்ந்த ஊர், வீட்டையும் அந்தப் போர் விட்டுவைக்கவில்லை. இதனால் மாட்ரிக் குடும்பத்தினர் வீடு, கிராமம், நண்பர்கள், உறவினர்களைத் துறந்து பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைய வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் எல்லாம் தன் ஒரே நண்பனைப் போல மாட்ரிக் கருதியது கால்பந்தை மட்டும்தான்.

ஒரு மாணவனாக அவருக்குக் கால்பந்துப் பயிற்சி அளித்த குரேஷிய கால்பந்து கிளப்பான 'ஃஸைடுக் ஸ்பிளிட்', தங்கள் இளைஞர் பயிற்சி மையத்தில் அவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்தது. அவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என்பதே அதற்குக் கூறப்பட்ட காரணம். ஆனால், மாட்ரிக் இப்போதுவரை ஒல்லியாகத்தான் இருக்கிறார்.

அதேபோல, அவர் குட்டையாகவும் வலுவில்லாதவராகவும் இருப்பதாகக் கூறி புகழ்பெற்ற ஐரோப்பிய கால்பந்து 'கிளப்'களான அர்செனல், பார்சிலோனா, பாயெர்ன் மியூனிக் உள்ளிட்டவை நிராகரித்தன. கடும் போராட்டங்களுக்குப் பிறகு ரியல் மாட்ரிட் அணிக்கு 2012-ல் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

நிரூபணமான பொய்

"என் வாழ்க்கை முழுவதும் என் கால்பந்துத் திறமை பற்றி மக்கள் கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருந்தார்கள். என்னால் திறமையாக விளையாட முடியாது என்றார்கள். அப்போது பெரிதாகவும் வலுவாகவும் நல்ல உடல்நிலையுடன் நான் இருக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான். அதேநேரம் அந்தக் கேள்விகள் எனக்குக் கூடுதல் ஊக்கமளித்தன! அவர்களது கூற்றைப் பொய் என்று நிரூபிப்பதில் நான் உறுதிகொண்டேன்" என்கிறார் மாட்ரிக்.

அவர்களது கூற்று பொய் என்பதை, இந்த உலகக் கோப்பையில் அவர் நிரூபித்துவிட்டார். குரேஷிய அணி என்றாலும், 'கிளப்' என்றாலும் அந்த அணிகளை இயக்கும் இன்ஜினாக அவரே திகழ்கிறார். உலகக் கோப்பையில் 'தங்கப் பந்து' விருதைப் பெற்றிருக்கிறார். 'இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை' கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரை விஞ்சி மாட்ரிக் பெறக்கூடும். இரண்டு மாதங்களுக்கு முன் 'சாம்பியன்ஸ் லீக்' போட்டித் தொடரில் ரியல் மாட்ரிட் அணி வெல்ல அவரே காரணமாக இருந்தார். இப்போது உலகக் கோப்பை இறுதிவரை குரேஷிய அணி முன்னேறியிருப்பது, அவரது திறமைக்கான இரண்டாவது சாட்சி.

தவறான முடிவு

அதேநேரம் வெறும் புள்ளிவிவரங்கள், கோல்களை மட்டும் வைத்துக்கொண்டு மாட்ரிக்கின் திறமையை ஒருவர் குறைத்து மதிப்பிடலாம். அப்படிச் செய்வது தவறாகவே முடியும். இந்த உலகக் கோப்பையில் அவர் அடித்தது இரண்டே கோல்கள்தான். ஆனால், கால்பந்து என்பது 100 சதவீதம் குழு விளையாட்டு. பலரது பங்களிப்பில்தான் ஒரு அணியின் வெற்றி சாத்தியம் என்பதற்கு மாட்ரிக் போன்றவர்கள் சிறந்த உதாரணமாகி இருக்கிறார்கள்.

மாட்ரிக் ஆடுவதைப் பார்க்கும்போது இவ்வளவு எளிதாக நாமும்கூட கால்பந்து ஆடிவிட முடியுமே என்றுதான் தோன்றும். ஆனால், உண்மையில் அப்படி ஆடுவது சாத்தியமல்ல. சிக்கலான அந்த எளிமைதான் மாட்ரிக்கின் தனித்துவம். 'மாட்ரிக் ஆடுவதைப் பார்ப்பது என்பது ஒரு மழைக்கால மாலை நேரத்தில் மெதுவாகக் கசிந்துவரும், மென்மையான இசையைப் போன்று எளிமை நிறைந்தது, ஆசுவாசம் அளிப்பது' என்று ஒரு விளையாட்டு எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார். மாட்ரிக் பெற்ற விருதுகளின் உச்சமாக இந்தப் பாராட்டைக் கருதலாம்


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x