Last Updated : 15 Jun, 2018 11:03 AM

 

Published : 15 Jun 2018 11:03 AM
Last Updated : 15 Jun 2018 11:03 AM

இந்திய கால்பந்தின் கதாநாயகன்!

கால்பந்து விளையாட்டில் நூறாவது போட்டி, புகழ்பெற்ற நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸியின் சாதனை சமன், கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து இறுதிப் போட்டியில் முத்திரை பதிக்கும் ஆட்டம் என ஒரே தொடரில் மூன்று மைல்கல்களைத் தாண்டி அசத்தியிருக்கிறார் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. இந்தியாவில் கால்பந்து அணியே இல்லை என்ற ஒரு காலம் இருந்தது. ஆனால், இன்றோ கால்பந்து விளையாட்டில் சர்வதேசத் தொடரில் கோப்பை வெல்லும் அளவுக்கு இந்திய அணி உருவெடுத்திருக்கிறது!

உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடர் நடைபெற்றுவரும் வேளையில், இந்திய கால்பந்து அணியின் இந்த முன்னேற்றம் கால்பந்து ரசிகர்களை உற்சாசம் கொள்ளச் செய்திருக்கிறது. இந்தியா, கென்யா, நியூசிலாந்து, சீன தைபே ஆகிய அணிகள் இந்தத் தொடரில் மோதின. மும்பையில் நடைபெற்ற இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தைக் காண சுமார் 2,500 பார்வையாளர்களே வந்திருந்தனர். இதனால் போட்டியைக் காண வருமாறு சுனில் சேத்ரி உருக்கமாக ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை சமூக ஊடகங்களில் வைரலானது. இதன் பின்னர் எல்லாப் போட்டிகளின்போதும் அரங்கம் ரசிகர்களால் நிறைந்திருந்தது.

இந்தத் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் கென்யாவுடன் விளையாடிய போது, அது சுனில் சேத்ரியின் நூறாவது போட்டியாகவும் அமைந்தது. நூறாவது சர்வதேசப் போட்டியில் விளையாடும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது. மூன்று சுற்றுப் போட்டிகளில் சீன தைபே, கென்ய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய அணி. சீன தைபே அணிக்கு எதிரான சுற்றுப் போட்டியில் சுனில் சேத்ரி ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்தினார். இது அவரது மூன்றாவது சர்வதேச ஹாட்ரிக் கோலாகவும் அமைந்தது.

இறுதிப் போட்டியில் கென்யா அணியை மீண்டும் சந்தித்தது இந்திய அணி. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. அபாரமாக விளையாடிய கேப்டன் சுனில் சேத்ரி, இரண்டு கோல்களையும் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

Soccer -3right

இரண்டு கோல்கள் அடித்தபோது ஓசையில்லாமல் இன்னொரு சாதனையையும் அவர் படைத்தார். சர்வதேசப் போட்டிகளில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, அர்ஜெண்டினாவுக்காக அடித்த 64 கோல்களை சுனில் சேத்ரி சமன் செய்தார். இந்தப் பட்டியலில் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 81 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்குக் கோப்பையையும் பெற்றுத் தந்திருக்கிறார் சுனில் சேத்ரி. போட்டியைக் காண வருமாறு இந்திய ரசிகர்களுக்கு சுனில் சேத்ரி உருக்கமாகக் கோரிக்கை வைத்தபோது இப்படிச் சொன்னார். “நீங்கள் விரும்பும் ஐரோப்பிய தரத்திலான போட்டி இங்கு நடைபெறவில்லை. ஆனால், இந்திய கால்பந்து அணியின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் மைதானத்தில் வந்து எங்களைப் பார்க்க வேண்டும்" என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

சுனில் சேத்ரி நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x