

மும்பை: இளம் தலைமுறையை சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவன ஊழியர் ஒருவரின் விடுப்பு குறித்த மின்னஞ்சல் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதனை அவருடன் பணியாற்றும் தலைமை அதிகாரி பகிர்ந்துள்ளார்.
நம்மில் பலரும் பள்ளி செல்லும் நாட்கள் முதலே எழுதி வருகிற கடிதம் என்றால் அது விடுப்பு கடிதம் (லீவ் லெட்டர்) தான். விடுப்பு கடிதத்தை ஆசிரியர், நிறுவனத்தின் மேல் அதிகாரி ஆகியோருக்கு தான் பொதுவாக எல்லோரும் எழுதுகிறோம். அதை இப்படித்தான் எழுத வேண்டும் என்ற பார்மெட்டுகளும் உண்டு.
அது அனைத்தையும் உடைத்து முற்றிலும் மாறாக தனது விடுப்பு குறித்த அறிவிப்பை மூத்த அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலமாக மிகவும் கேஷுவலாக அனுப்பி உள்ளார் இளம் தலைமுறை ஊழியர் ஒருவர். அது தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. அதனை அவரது மேல் அதிகாரி, எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
“என்னுடன் பணியாற்றும் ‘ஜென் Z’ தலைமுறையினர் இப்படித்தான் விடுப்பு கேட்டு பெறுகிறார்கள்” என அந்த பதிவில் முதலீட்டாளர் சித்தார்த் ஷா தெரிவித்துள்ளார். ‘ஹாய் சித்தார்த். நவம்பர் 8-ம் தேதி நான் லீவ். Bye’ என அந்த ஊழியர் அனுப்பிய மின்னஞ்சலின் ஸ்க்ரீன்ஷாட்டை மும்பையை சேர்ந்த சித்தார்த் தனது பதிவில் இணைத்துள்ளார். தனது ட்வீட் மூலம் விடுப்பு எடுத்துக் கொள்ள ஓகே சொல்லியுள்ளார் சித்தார்த். இது சமூக வலைதளத்தில் விவாதத்துக்கு வித்திட்டுள்ளது. பலரும் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தன்னோடு பணியாற்றும் இளம் தலைமுறை ஊழியர்கள் குறித்து சித்தார்த் வரிசையாக பல ட்வீட்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ‘என்னுடன் பணியாற்றும் இளம் தலைமுறையினர் பணியில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள். அவர்களால் எனக்கு பெருமை தான். கடந்த மூன்று வருடங்களாக ஏழு முதல் எட்டு இளம் தலைமுறையை சேர்ந்த ஊழியர்களுடன் நான் பணியாற்றி வருகிறேன்’ என அதில் சித்தார்த் தெரிவித்துள்ளார்.