ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வுக்காக தலைமன்னார் - ராமேசுவரம் கடலை நீந்தி கடந்த சிறுவர்

பாக் ஜலசந்தி கடலில் நீந்தும் லக்‌ஷய்
பாக் ஜலசந்தி கடலில் நீந்தும் லக்‌ஷய்
Updated on
1 min read

ராமேசுவரம்: ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து ராமேசுவரம் வரையிலான பாக் ஜலசந்தி கடலை லக்‌ஷய் என்ற சிறுவர் புதன்கிழமை நீந்தி கடந்தார்.

சென்னை - துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், ஐஸ்வர்யா தம்பதியினரின் மகன் லக்‌ஷய் (12). இவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் நீச்சல் பயிற்சியில் கைத்தேர்ந்தவர். பல்வேறு நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையிலுள்ள தலைமன்னாரிருந்து ராமேசுவரம் வரையிலான 31 நாட்டிக்கல் (50 கி.மீ) தொலைவிலான பாக் ஜலசந்தி கடலை நீந்துவதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடமும் அவர் தரப்பில் அனுமதி கோரியிருந்தனர்.

அனுமதி கிடைத்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு படகுகளில் லக்‌ஷய், அவரது பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் சதீஷ், செல்வம், ஒருங்கிணைப்பாளர் ரோஜர், மருத்துவக் குழு, மீனவர்கள் உள்ளிட்ட 22 பேர் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர்.

செவ்வாய்க்கிழமை மாலை 5:05 மணியளவில் தலைமன்னாரிலிருந்து லக்‌ஷய் நீந்தத் துவங்கி, புதன்கிமை மதியம் 3.30 மணியளவில் ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடற்பகுதிக்கு வந்தடைந்தார்.

தொடர்ந்து 22 மணி நேரம் 35 நிமிடங்களில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தி உள்ளார். இதன் மூலம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர், கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை லக்‌ஷய் படைத்துள்ளார். ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் லக்‌ஷய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in