அமெரிக்காவை விட இந்தியாவில் வசிப்பது சிறப்பாக இருக்கிறது: குடும்பத்துடன் டெல்லியில் குடியேறிய பெண்மணி

டெல்லியில் வசித்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்சர்.
டெல்லியில் வசித்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்சர்.
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்சர் என்ற பெண் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தனது 3 குழந்தைகள், கணவருடன் டெல்லியில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் கிறிஸ்டன் பணியாற்றி வருகிறார்.

இந்தியாவில் குடியேறுவதற்கு பல காரணங்களைக் கூறுகிறார் கிறிஸ்டன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: முதன்முதலாக 2017-ல் டெல்லிக்கு வந்தேன். அப்போது இந்தியாவில் பல இடங்கள் எனக்கு மிகவும் பிடித்தவையாக மாறிவிட்டன. அதன் பின்னர் கடந்த 2022-ல்நான் அமெரிக்காவை விட்டுவிட்டு டெல்லியில் குடியேறினேன். அமெரிக்காவை விட இந்தியாவில் வசிப்பது சிறப்பாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

என்னை யாரும் தவறாக எண்ண வேண்டாம். நான் அமெரிக்காவை நேசிக்கிறேன். ஆனால், அந்த நாடானது அனைத்து வகையிலும் சரியான இடம் அல்ல. மேலும் அமெரிக்கா போன்ற இடங்களில் கூட நிறைய பிரச்சினைகள் உள்ளன.

அமெரிக்காவில் அனைத்துமே சுயமானதாக இருக்கும். அங்கு சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை பின்பற்றப்படுகிறது. சமூகம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றில் அங்கு வறட்சி உள்ளது. அங்கு யாரும் பிறருக்கு உதவ முன்வரமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் வாழ்க்கை முறை வண்ணமயமாக உள்ளது. இங்கு நீங்கள் தனிமையை உணரமாட்டீர்கள். கூட்டம் கூட்டமாக மக்கள் ஓடி வந்து உதவுகின்றனர். அமெரிக்காவில் பெற முடியாத சமூக வாழ்க்கை முறை, கலாச்சாரம், அனுபவங்கள் இங்கு என் குழந்தைகளுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பணத்தைவிட சிறந்த வாழ்க்கை முக்கியம். அமெரிக்கா எந்த வகையிலும் சரியான இடம் அல்ல. அமெரிக்காவில் வசித்தால் ஏராளமான பணத்தை சம்பாதிக்கலாம். அதுதான் உங்களுடைய இலக்கு என்றால். அங்கு நீங்கள் சந்தோஷமாக வாழலாம். ஆனால் பணத்தை விட வாழ்க்கை சிறந்தது என்று நான் நம்புகிறேன். அதனால்தான் இங்கு குடும்பத்துடன் வந்துவிட்டேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். கிறிஸ்டன் பிஷ்சரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in