Published : 15 Jun 2018 11:08 AM
Last Updated : 15 Jun 2018 11:08 AM

‘நடால் ஓபன்!’

 

ர்ப்பாட்டமாக நடந்து முடிந்திருக்கிறது ‘ரஃபேல் நடால் ஓபன் 2018!’.

ஆம்… இனி, ‘பிரெஞ்சு ஓபன்’ போட்டியை இப்படித்தான் அழைக்க வேண்டும். ஏனென்றால், ‘லா அண்டெசிமா!’. அதாவது, 11-வது முறையாக என்று பொருள். மூன்று இயக்க விதிகளைத் தந்த நியூட்டன், இன்று இருந்திருந்தால், ‘ரோலாந்த் கேரோ மைதானத்தில் ரஃபேல் நடாலை யாராலும் வீழ்த்த முடியாது’ என்று நான்காவது விதியையும் எழுதியிருப்பார்.

19 வயதில் முதன்முறையாக பிரெஞ்சு ஓபன் கோப்பையை வென்றபோது, நடாலிடம் ‘ஃபிட்னெஸ்’ இருந்தது. 20-களில், ‘வாலி ஷாட்’களை (எதிராளியிடமிருந்து வரும் பந்து தரையைத் தொடுவதற்குள் அதை அடித்து, மீண்டும் எதிராளியிடம் விரட்டுவது) விளையாடுவதில் திறன் பெற்றவராக மிளிர்ந்தார். இதோ, தன்னுடைய 32 வயதில் இப்போது ‘சர்வீஸ்’ செய்வதில் கவனம் செலுத்துகிறார்.

இந்தப் பரிணாம வளர்ச்சிதான் நடாலிடம் இருக்கும் சிறப்பம்சம். அவ்வப்போது காயங்கள் ஏற்பட்டாலும், அதைக் கடந்துவரும் திறன், மீண்டும் காயங்கள் ஏற்படாதவாறு ஸ்டைலை மாற்றிக்கொள்ளும் தன்மை, மைதானங்களைத் தேர்வு செய்து விளையாடும் அணுகுமுறை என ரோஜர் ஃபெடரரின் வழியையே நடாலும் பின்பற்றுகிறார்.

இந்தக் காரணங்களால், பிரெஞ்சு ஓபன் கோப்பையை இந்த முறையும் ரஃபேல் நடால்தான் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பு என்பதைவிட நம்பிக்கை இருந்தது என்று சொல்லலாம். அதனால், ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தைப் பற்றி டென்னிஸ் ரசிகர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

கறுப்புச் சிறுத்தையின் பாய்ச்சல்

ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்தது, மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டிகளைத்தான். காரணம், செரீனா வில்லியம்ஸ்! மிகவும் சிக்கலான மகப்பேறை எதிர்கொண்ட செரீனா, கடந்த சில மாதங்களில் எந்தப் போட்டியிலும் சோபிக்கவில்லை. ‘நடால் ஓபனை’, ‘செரீனா ஓபன்’ என்று பேச வைப்பார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும்படியாக ‘பாய்ச்சல் சிறுத்தை’யாக பாரிஸ் மைதானத்தில் கால் பதித்தார் செரீனா.

உடலைக் கவ்விப் பிடிக்கும் ‘கேட் சூட்’ (catsuit) அணிந்து முதல் போட்டியை விளையாடினார் அவர். அதற்கான ‘இன்ஸ்பிரேஷ’னை அவருக்குக் கொடுத்தது சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளியாகி ஹிட்டான ‘பிளாக் பேந்தர்’ படம். சூப்பர் ஹீரோக்கள் என்றால் வெள்ளையர்கள் மட்டும்தான் என்ற கற்பிதத்தை உடைத்து, கறுப்பர்களின் கலாச்சாரத்தைக் கொண்டாடும்விதமாக உருவாக்கப்பட்ட படம் அது.

செரீனா அந்த உடையை அணிந்து விளையாடுவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, எவ்வளவுதான் தோல்வியடைந்தாலும், கறுப்பின மக்கள் மீண்டும் மேலே மேலே வருவார்கள் என்பது. இது, செரீனாவின் சமீபத்திய டென்னிஸ் வாழ்க்கைக்கும் பொருந்தும். தாயான பிறகு, சில போட்டிகளில் பங்கேற்க முடியாமலும், பங்கேற்ற சில போட்டிகளில் வெற்றிபெற முடியாமல் போனாலும், தன்னிடம் இன்னும் போராடும் குணம் உண்டு என்பதை முதல் சுற்று விளையாட்டுகளில் பிரதிபலித்தார். இரண்டாவது காரணம், இப்படி இறுக்கமான உடையை அணிந்து விளையாடுவது தன் உடலில் ரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கும் என்பது. ஆனால், அவரது உடல் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. மரியா ஷரபோவா உடனான ஆட்டத்தின்போது, காயம் காரணமாகப் பின்வாங்கினார் செரீனா.

நடால் தொட்டது… செரீனா விட்டது…

இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் சுவாரசியமான விஷயம் ஒன்று நடந்திருக்கிறது; ஒன்று நடக்காமல் போயிருக்கிறது. இரண்டுக்குமே மையமானவர் ஒருவர்தான். அவர்… மார்கரெட் கோர்ட்!

மார்கரெட் கோர்ட், முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. 1968-ல் ‘ஓபன் எரா’ (அதாவது, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அமெச்சூர் வீரர்களுடன் புரொஃபெஷனல் வீரர்கள் விளையாடத் தொடங்கிய காலம்) தொடங்குவதற்கு முன்பு, மகளிர் டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். ஆஸ்திரேலியரான இவர், ‘ஆஸ்திரேலிய ஓபன்’ போட்டிகளில் 11 முறை கோப்பை வென்றிருக்கிறார். டென்னிஸ் வரலாற்றில் ஒரே ஓபன் போட்டியில், பாலினம் கடந்து மிக அதிக முறை கோப்பை வென்ற முதல் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

Ten மார்கரெட் கோர்ட்

இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில், ‘லா அண்டெசிமா’வாக நடால் வந்ததால், ஒரே ஓபன் போட்டியில் மிக அதிக முறை கோப்பை வென்ற இரண்டாவது டென்னிஸ் வீரர் என்ற பெருமையைப் பெற்று, மார்கரெட்டின் சாதனையைச் சமன் செய்திருக்கிறார்.

தன்னுடைய கரியரில் 24 கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளை வென்று, ‘மிக அதிக அளவில் கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளை வென்ற முதல் டென்னிஸ் வீராங்கனை’ என்ற பெருமையைக் கொண்டிருக்கிறார் மார்கரெட் கோர்ட். அவருக்கு அடுத்த இடத்தில் செரீனா இருக்கிறார். ஒருவேளை, இந்தப் போட்டியில், கோப்பையை செரீனா வென்றிருந்தால், மார்கரெட்டின் சாதனையைச் சமன் செய்திருப்பார்.

இந்நிலையில், இப்போது டென்னிஸ் ரசிகர்களுக்கு இருக்கும் கேள்விகள்… மார்கரெட்டின் சாதனையை செரீனா சமன் செய்வாரா? ஃபெடரரின் சாதனையை நடால் எட்டிப் பிடிப்பாரா என்பவைதான். செய்யலாம்... பிடிக்கலாம்... ஆனால், கொஞ்ச காலம் ஆகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x