

ப
டித்துக்கொண்டே பகுதி நேரம் வேலை செய்யும் மாணவ, மாணவிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், படித்துக்கொண்டே தொழிலதிபர்களான மாணவ, மாணவியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சென்னை என்.ஐ.எஃப்.டி.யில் ஃபேஷன் டெக்னாலஜி பயின்ற பீகாரைச் சேர்ந்த பிரவீனும், ஹைதராபாத்தைச் சேர்ந்த சிந்துஜாவும்தான் அவர்கள்.
கல்லூரியில் பயிலும் காலத்தில் படிப்பைத் தாண்டி கேளிக்கைகள், கொண்டாட்டங்களில்தான் மாணவர்கள் அதிகக் கவனம் செலுத்துவார்கள். ஆனால், பிரவீனும் சிந்துஜாவும் கல்லூரிக் காலத்தில் கேளிக்கைகளில் நேரத்தைச் செலவிடாமல், திட்டமிட்டு செயல்பட்டு தொழிலதிபர்களாக மாறியிருக்கிறார்கள். 2014-ல் கல்லூரியில் ஏழாவது செமஸ்டர் படிக்கும்போது இருவரும் இணைந்து 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆன்லைனில் துணி விற்பனையைத் தொடங்கினார்கள். ஃபிளிப்கார்ட், அமேசான், வூனிக், பேடிஎம் ஆகிய இணையதளங்களில், ‘யங் டிரெண்ட்ஸ்’ என்ற பெயரில் தங்களது தயாரிப்புகளை இவர்கள் விற்கத் தொடங்கினர்.
அந்த செமஸ்டர் முடிவதற்குள்ளாகவே, பிரவீன் - சிந்துஜாவின் இந்த இணையக் கடை பெரிய நகரங்களில் பிரபலமடைந்துவிட்டது. கல்லூரி விழாக்களுக்கு தேவையான பிரத்யேக டி ஷர்ட்களை நேர்த்தியாக இவர்கள் செய்து கொடுத்ததே இதற்கு முக்கிய காரணம். எட்டாவது செமஸ்டரின்போது சுமார் 100 கல்லூரிகளுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டி ஷர்ட்களை உற்பத்தி செய்யும் நிலைக்கு உயர்ந்தார்கள். “ஏழாவது செமஸ்டரில் தினசரி 10 ஆர்டர்கள் என்ற நிலையில் தொடங்கிய எங்களின் நிறுவனம், எட்டாவது செமஸ்டரில் தினமும் 100 கல்லூரிகளுக்கு டி-ஷர்ட் விற்கும் நிலைக்கு உயர்ந்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது” என்கிறார் சிந்துஜா.
இவர்களின் இந்த வெற்றி ஒரே நாளில் சாத்தியமாகிவிடவில்லை. ஆர்டர்கள் அதிகமான காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு காலதாமதமின்றி உடைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக திருப்பூருக்கு நேரில் சென்று, தரமான பனியன் துணிகளை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்.
டி ஷர்ட் டிசைன் செய்வதற்கென கோவையிலிருந்து ஐ.டி. நிபுணர்களை நியமித்து கம்ப்யூட்டரில் அதனை மேம்படுத்தினர். 18 முதல் 28 வயதுடைய இளைஞர்களை மையமாக வைத்து, அவர்களின் ரசனைக்கேற்ப டி ஷர்ட் டிசைன்களை பிரவீனும் சிந்துஜாவும் வடிவமைத்திருக்கிறார்கள். டி ஷர்ட்களில் இடம்பெறும் வாசகங்களும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனமும் செலுத்தியிருக்கிறார்கள்.
“பொதுவாக சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகும் விஷயங்கள், இளைஞர்களை அதிகம் ஈர்க்கும். அந்த வகையில் டிரெண்டிங் விஷயங்களைக் கையில் எடுத்து தனித்துவமான வார்த்தைகளை உருவாக்கினோம். இணையதளத்தில் ஏராளமான போட்டி உண்டு. எனவே, எங்களின் தயாரிப்பை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வலுவான அடிப்படை காரணம் வேண்டும் என்பதால், வாசகங்களில் கவனம் செலுத்தினோம்” என்கிறார் பிரவீன்.
தமிழகம் மட்டுமல்லாமல் தெலங்கானா, கர்நாடகா, ஹரியாணா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சரக்கு குடோன்களையும் இவர்கள் அமைத்துள்ளனர்.
தொழில் போட்டியைச் சமாளிக்க புதிது புதிதாக இவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் சற்றே வித்தியாசமாகத்தான் இருக்கின்றன. 2016-ம் ஆண்டு ‘காதலர் தின’த்தை குறிவைத்து ‘couple clothing’ என்ற உடையை அறிமுகம் செய்தார்கள். இந்த உடை இளைஞர்களை பெரிய அளவில் ஈர்த்தது. இளைஞர்களை ஈர்க்க இன்னும் பல யோசனைகளை வைத்திருப்பதாகவும் இவர்கள் சொல்கிறார்கள்.
கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் வாங்கும் திறனுக்கேற்ப 250 முதல் 600 ரூபாய்வரை டி ஷர்ட்களை இவர்கள் விற்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆன்லைன் கலெக்ஷன்களை மேம்படுத்துகிறார்கள். அத்துடன் சமூக வலைதளங்கள் மூலமாக தங்கள் உடைகளை விளம்பரப்படுத்துகிறார்கள். இதுபோன்ற காரணங்களால் ‘யங் டிரெண்ட்ஸ்’ நெட்டிசன்கள் மத்தியிலும் பிரபலமாகியிருக்கிறது.
10 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட இவர்களின் நிறுவனம் இன்று நாடு முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது. இந்த ஆண்டு நிலவரப்படி இவர்களின் ஒட்டுமொத்த விற்பனை வருவாயும் 20 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது.