

சிங்கம்புணரி: எஸ்.புதூர் அருகே 27 ஆண்டுகளுக்கு பின் நடந்த ஆடி படையல் விழாவில் ஆண்கள், பெண்கள் மேலாடையின்றி பொங்கல் வைத்தும், 1,000 கிடாய்கள் வெட்டியும் வழிபாடு செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிழவயல் வனப்பகுதியில் சங்கிலி கருப்பர் கோயில் உள்ளது. இங்கு கிழவயல், மணியாரம்பட்டி, பொன்னடப்பட்டி , அம்மன்குறிச்சி உள்ளிட்ட பகுதி மக்கள் வழிபாடு செய்கின்றனர். விவசாயம் செழிக்க, நோயின்றி வாழ 27 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் ஆடி படையல் விழாவை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, கடந்த மாதம் வெள்ளையம்மன் கோயிலில் இருந்து சாமியாடிகள் கரகம் எடுத்து ஒவ்வொரு ஊராகச் சென்று அருள்வாக்கு கூறினார்.
நேற்று கிராம மக்கள் ஒன்று கூடி கோயிலுக்குச் சென்றனர். மாலையில் சாமியாடிகள் சாமியாடியதும் கிடாய்களை பலியிட தொடங்கினர். மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட கிடாய்கள் பலியிடப்பட்டன. ஆண்கள், பெண்கள் மேலாடை அணியாமல் மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மேலும் பலியிட்ட கிடாய் இறைச்சியை பாரம்பரிய முறைப்படி தீயில் வாட்டி சமைத்தனர். தொடர்ந்து அசைவ விருந்து வைத்தனர். விரதம் இருந்த சிலர் மண் உணவு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விடிய, விடிய நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங் கேற்றனர்.