

சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் என்பது உயிர் காக்கும் கவசம். இந்தச் சூழலில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு கூகுள் மேப்பில் அலர்ட் கொடுத்துள்ளார் பயனர் ஒருவர். அதுவும் இந்த லொக்கேஷன் சென்னையில் இருந்தது நெட்டிசன்களின் கவனத்தை பெற்றது.
ஏதேனும் ஒரு புதிய இடத்துக்கோ அல்லது ஊருக்கோ செல்வதென்றால் பெரும்பாலனவர்கள் இப்போது கூகுள் மேப்ஸ் துணையை நாடுவதுண்டு. லொக்கேஷனை பகிர்ந்தால் போதும் அட்ரஸ் இல்லா தெருக்களை கூட கூகுள் மேப்ஸ் அறியும் என சொல்லலாம். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் இந்த அப்ளிகேஷன் மிகவும் பிரபலம். இந்தியாவில் தினந்தோறும் கூகுள் மேப்ஸில் 5 கோடிக்கும் மேற்பட்ட இடங்கள் குறித்து பல்வேறு மொழிகளில் தேடலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொலைவு சுமார் 2.5 பில்லியன் கிலோ மீட்டர் என சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் சென்னை, வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஒரு இடத்தை பயனர் ஒருவர், ‘போலீஸ் இருப்பாங்க... ஹெல்மெட் போடுங்க’ என மேப் செய்துள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டுமென்பது மோட்டார் வாகன விதிகளின் படி அவசியமாகும். அப்படி ஹெல்மெட் அணியாதவர்களுக்கு போலீஸார் அபராதம் விதிக்கலாம். சென்னை போன்ற பெரு நகரங்களில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவது அவசியமாக உள்ளது. இந்தச் சூழலில் அந்த கூகுள் பயனர் சம்பந்தப்பட்ட இடத்தை மேப் செய்துள்ளார்.
இது தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜாவின் கவனத்துக்கு சென்றுள்ளது. அந்த ஸ்க்ரீன்ஷாட்டை அப்படியே அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ‘ஹெல்மெட் விழிப்புணர்வு சார்ந்த அடுத்த பிரச்சாரத்தில் நமது போக்குவரத்து காவலர்கள் இதுபோன்ற முயற்சியை முன்னெடுக்கலாம்’ என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இருந்தாலும் கூகுள் மேப்ஸில் இருந்து அந்த மேப்பிங் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதை மேப்பில் சேர்ச் செய்தால் இடத்தில் பெயர் வருகிறது. ஆனால், அதை லொக்கெட் செய்ய முடியவில்லை. ஆனாலும் இருசக்கர வாகன ஓட்டிகள், பயணம் மேற்கொள்ளும்போது ஹெல்மெட் அணிவது அவசியம். அது விதிகளுக்கு என்று மட்டும் இல்லாமல் உயிரை பாதுகாக்கும் கருவி என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.