Published : 10 May 2018 18:41 pm

Updated : 11 May 2018 10:53 am

 

Published : 10 May 2018 06:41 PM
Last Updated : 11 May 2018 10:53 AM

சிறு ஓவியங்களில் விரியும் பெரு நகரம்

 


ண்பர்களோடு அன்றாடம் கூடிக் குதூகலிக்கும் தெருவோர டீ கடையின் ஸ்பெஷாலிட்‘டீ’, அன்போடு மலர்களைக் கோத்துத் தரும் பூக்காரப் பாட்டியின் பாசம், நம்ம பட்ஜெட்டுக்குள்ளேயே தினுசுதினுசாக உடைகளை வடிவமைத்துத் தரும் தையல் கலைஞரின் திறமை… இப்படி நம்மைச் சுற்றிலும் இருக்கும் பலர்/பல விஷயங்கள் நமக்கு அலாதியாகத் தோன்றுவதில்லை.

நம்மைப் போலவே அன்றாடத்தில் இருக்கும் அழகைக் கண்டுகொள்ளத் தெரியாமல் இருந்தவர்தான் ஹேமலதா வெங்கட்ராமனும். ஆனால், சாமானியர்களின் பண்பாட்டில், வாழ்க்கையில் ததும்பும் அழகைக் கண்டறியும் கொலம்பஸாக அவரை மாற்றி இருக்கிறது மூன்றாண்டு அமெரிக்க கொலம்பஸ் நகரத்து வாசம்.

‘மெட்ராஸ் இன் மினி’ என்ற தலைப்பில் சென்னையின் பல்வேறு அம்சங்களை மினியேச்சர் ஓவியங்களாகத் தீட்டிவரும் நுண்கலைக் கலைஞர் ஹேமலதா வெங்கட்ராமன். திண்டுக்கல்லில் பிறந்து சென்னையில் படித்த இவர், தற்போது வசிப்பது அமெரிக்காவில். சென்னையில் இளநிலைக் கட்டிடக்கலை பட்டப் படிப்பை முடித்தார். அடுத்து, ஒஹையோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் நுண்கலையில் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படித்தார்.

கலையும் கட்டிடக்கலையும்

“20 ஆண்டுகளுக்கும் அதிகமாக சென்னையிலேயே வாழ்ந்திருந்தாலும் இங்கிருக்கும் அரிய விஷயங்களை இத்தனை நாட்கள் அறிந்துகொள்ளாமலேயே இருந்துவிட்டோமே என்ற ஏக்கம் முதன்முதலில் துளிர்த்தது பி.ஆர்க் படிக்கும்போதுதான். மிண்ட் தெரு, மூர் மார்க்கெட், பாரிமுனையில் இருக்கும் அர்மீனியன் தேவாலயம் என சென்னையின் பழமையான பகுதிகளையும் கட்டிடங்களையும் குறித்து ஆவணப் படுத்தும் ‘ஸ்டூடண்ட்ஸ் புராஜெக்ட்’டை நான்காண்டுகளுக்கு முன்னால் சி.எம்.டி.ஏ எனக்குத் தந்தது. அதன் பின்னர்தான் சென்னையில் இருக்கும் பாரம்பரியக் கட்டிடங்களின் முக்கியத்துவம் புரியத் தொடங்கியது.

ஆவணங்களைத் திரட்டும் அதே வேளையில் சென்னை நகரத்தை வெவ்வேறு கோணங்களில் சித்திரங்களாக, ‘மெட்ராஸ் கேட்டலாக்’ என்ற பெயரில் 2014-லிருந்து 2015 வரை தீட்டினேன். சென்னையின் பழம்பெரும் கட்டிடங்களைச் சுற்றிலும் வாழும் மக்களின் வாழ்க்கை குறித்து வலைப்பூ எழுதத் தொடங்கினேன். கலையும் கட்டிடக்கலையும் சங்கமிக்கும் புள்ளியே எனக்கான களம் என்பதை அப்படித்தான் கண்டுபிடித்தேன்” என்கிறார் ஹேமலதா.

அன்றாடத்தின் அழகு

அதிலும், அமெரிக்கப் படிப்பும் வாழ்க்கையும் சொந்த ஊரின் அருமையை ஹேமாவுக்குப் புரியவைத்திருக்கின்றன. “அமெரிக்காவைப் பொறுத்தவரை இஸ்திரி, தையல் உள்ளிட்ட உழைப்புக்கான கூலி எக்கச்சக்கம். நம்ம ஊரைப் போல அங்கே தெருவுக்குத் தெரு டீ கடை கிடையாது. ஒரு பூங்கொத்து வாங்கணும்னா கூட ரொம்ப செலவு பண்ணணும்.

இதையெல்லாம் அனுபவிச்ச பிறகுதான் நம்முடைய மக்களோட உழைப்பை நாம எத்தனை அலட்சியப்படுத்துறோங்கிறது உறுத்துச்சு. இதை மனசுல வெச்சிக்கிட்டு 2017 டிசம்பரில் சென்னை வந்தபோது, ‘மெட்ராஸ் இன் மினி’ கான்செப்ட்டில் சென்னையோட அன்றாடத்தின் அழகைத் தீட்டினேன்” என்கிறார்.

கன்னிமரா நூலகம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், பூக்காரப் பாட்டி, டீக்கடை, ஷேர் ஆட்டோ, மெட்ரோ ரயில், மெட்ரோ குடிநீர் லாரி, லைட் ஹவுஸ், மெரினா கடற்கரை, மெட்ராஸ் லிட்ரரி சோஸைட்டி (எம்.எல்.எஸ்)…. என வெறும் 2-க்கு 3 என்ற அளவிலான காகிதத்தில் மெல்லிய தூரிகை கொண்டு நுட்பமாக அவர் தீட்டியிருக்கும் நீர் வண்ண ஓவியங்கள் அனைத்தும் சென்னையின் நிதர்சனங்களின் பிரதிபலிப்புகள்.

எக்ஸ்ட்ரா ஷுகர் ஸ்ட்ராங் டீ

“ஆரத் தழுவிக் கொண்டாட எத்தனையோ விஷயங்கள் சென்னையில் இருந்தாலும் விமர்சிக்கவும் சில இருக்கவே செய்கின்றன. அதில ஒண்ணு, ‘தனியாக வரும் பெண்கள் டீக்கடையில் நின்று தேநீர் அருந்தக் கூடாது’ என்ற எழுதப்படாத சட்டம். நான் ஒரு தேநீர்ப் பிரியை. அதிலும் டீ மாஸ்டர்கள் போட்டுத்தரும் ஸ்பெஷல் டீ ரொம்பவும் பிடிக்கும். ஆனால், நான் எப்போ டீக்கடைக்குப் போனாலும் எல்லாரும் விநோதமா பார்ப்பாங்க.

hemalatha

இந்தப் போக்கை உடைக்கறதுக்காகவே அடிக்கடி டீக்கடைக்குப் போயிடுவேன். இதில் அழகான விஷயம் என்னன்னா மூன்று வருடங்களுக்குப் பிறகு எனக்கு இஷ்டமான டீக்கடைக்குப் போனபோது என்னைப் பார்த்த கணத்தில் டீ மாஸ்டர் எனக்குப் பிடிச்ச ‘ஒரு எக்ஸ்ட்ரா ஷுகர் ஸ்ட்ராங் டீ’-னு பளீச்சினு சொன்னாரு” என்று சிரிக்கிறார்.

தேநீருக்கும் ஹேமலதாவுக்கும் இடையில் ஏதோ ஒரு தொட்டுத் தொடரும் ‘டீ’ பாரம்பரியம் இருக்கிறதோ என்னமோ தேநீர் பைகளிலும் தன் கைவண்ணத்தை அவர் காட்டிவருகிறார்.

சுருங்கி, கறை படிந்துபோன பயன்படுத்தப்பட்ட தேநீர்ப் பைகளில் அற்புதமான ‘மறுசுழற்சி கலை’ வடிவத்தையும் உருவாக்கிவருகிறார் இந்த ‘நுண் ஓவிய’ இளவரசி.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x