

ஈ
ஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் - இன்று துருக்கி இளைஞர்கள் அதிகம் உச்சரிக்கும் பெயர் இதுதான். ஒன்றரை ஆண்டுக்கு முன்புவரை பயணிகள் யாரும் இல்லாமல் காத்துவாங்கிக்கொண்டிருந்த ரயில் இது. ஆனால், இன்றோ இந்த ரயிலில் பயணிக்க வேண்டுமென்றால், பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருந்தால்தான் முடியும். ஒன்றரை ஆண்டுகளில் தலைக்கீழ் மாற்றம். அப்படி என்ன நடந்தது? சமூக வலைத்தளங்கள்தாம் காரணம். அவற்றின் உபயத்தால், ‘காதல் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் இந்த ரயில் தூள்கிளப்பிக்கொண்டிருக்கிறது.
துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள அர்ஸ் என்ற இடத்துக்கு சென்றுவருகிறது இந்த ஈஸ்டர்ன் ரயில். 1,365 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ரயிலில் பயணிக்க இந்திய மதிப்பில் சுமார் 750 ரூபாய் (11 டாலர்) இருந்தால் போதும். ஆனால், இந்தத் தூரத்தைக் கடக்க 24 மணி நேரம் பயணிக்க வேண்டும். ஆனால், இதே தூரத்தை விமானத்தில் வெறும் 2 மணி நேரத்தில் கடந்துவிடலாம் என்பதால், இந்த ரயிலில் கூட்டம் குறைய ஆரம்பித்து, 2016-ம் ஆண்டு இறுதியில் முழுவதும் காத்து வாங்க ஆரம்பித்தது.
ஆனால், கடந்த ஆண்டு ஓர் இளைஞர் பட்டாளம், விமானப் பயணத்தைப் புறக்கணித்துவிட்டு இந்த ரயிலில் ஏறியது. ரயிலில் ஒரு நாள் முழுவதும் கொண்டாட்டமாக அவர்கள் சென்றனர். ஊர் போய் சேர்ந்த பிறகு ரயிலில் தாங்கள் அடித்த லூட்டிகளையும் கும்மாளத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். ரயிலில் ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் பெற்ற உற்சாகத்தை புட்டுப்புட்டு வைத்தனர். ஈஸ்டர்ன் ரயில் பயணத்தில் கிடைத்த அனுபவத்தையும் மனநிம்மதியையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
இதை ஆச்சரியத்துடன் பார்த்த நெட்டிசன்கள், அவற்றை சமூக ஊடங்களில் பரப்பினர். அதனால், ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸுக்கு திடீர் மவுசு கூடியது. இதனால் ரயிலில் பயணிக்க கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. குறிப்பாக நீண்ட தூரம் பேசியபடி செல்ல விரும்பும் காதலர்கள், இந்த ரயிலை தேர்வு செய்ய ஆரம்பித்தனர். இதனால் காதலர்களின் எண்ணிக்கையும் கூடியது. விளைவு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 5 பெட்டிகளுடன் காற்றுவாங்கி ஓடிக் கொண்டிருந்த இந்த ரயில், இன்று 11 பெட்டிகளுடன் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை இளைஞர்களும் காதலர்களும் விரும்ப இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்த ரயில் வழித்தடத்தில் இயற்கைக் காட்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. எனவே, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி அரட்டை அடித்தபடி செல்ல அவர்கள் விரும்புகிறார்கள். அது மட்டுமல்ல, ரயிலில் ஒதுக்கப்படும் பெட்டியைப் பயணிகள் எப்படி வேண்டுமானாலும் அலங்கரித்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இளைஞர்களும் காதலர்களும் இந்த ரயிலை விரும்ப இதுவும் ஒரு காரணம்.
துருக்கியில் உள்ள பல இளைஞர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த இந்த ரயிலைதான் தேர்வு செய்கிறார்கள். காதலன் அல்லது காதலியை அழைத்துக்கொண்டு ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸில் பயணத்தைத் தொடங்கும் அவர்கள், ரயில் பெட்டிக்கு உள்ளேயே டின்னருக்கு ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி, அந்த ஒளியில் இயற்கை அழகை ரசித்தபடியே, காதலையும் வெளிப்படுத்துகிறார்கள்.
வயல்கள், அடர்ந்த காடுகள், குன்றுகள், மலைகள், ஆறுகள், பனி படர்ந்த பிரதேசம் என ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ரயில் இயற்கை அழகுக்கு வெகு அருகிலேயே பயணிப்பதால், 24 மணி நேரப் பயணம் இளைஞர்களுக்கு புதுவேகத்தையும் உற்சாகத்தையும் கரைபுரளச் செய்கிறது. இதுபோன்ற தருணங்களில் பயணிக்கும்போது தயக்கமின்றிக் காதலைச் சொல்வதும் அவர்களுக்கு எளிதாகிவிடுகிறது. ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் மீதான இளைஞர்களின் ஈர்ப்புக்கு முக்கிய காரணம் இதுதான்.
காதலர்கள் மட்டுமல்ல, நண்பர்கள், தோழிகளுடன் மறக்க முடியாத பயணத்தை மேற்கொள்ளவும் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ரயிலைத் துருக்கி இளைஞர்கள் நாடுகிறார்கள். அங்காராவில் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக ரயிலின் முன்பு செல்ஃபி எடுத்துக்கொள்வதில் தொடங்கி 24 மணி நேரம் நீடிக்கும் இந்த நீண்ட பயணத்தில், ஆட்டம், பாட்டம் எனக் கேளிக்கைச் செயல்களிலும் ஈடுபட்டு அவற்றை ஒளிப்படங்களாக எடுத்துக்கொள்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
சமூக வலைத்தளங்கள் மூலமாக இதுபோன்ற மாற்றம் ஏற்பட்டிருப்பதை நம்புவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், அதை உண்மை என நிரூபிக்க வைத்திருக்கிறது துருக்கியின் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ரயில்.