

மதுரை: “கெட்ட பழக்கங்களை தியாகம் செய்தால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு போக முடியும்,” என உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
முன்னாள் எம்.பி., கார்வேந்தன் எழுதிய தமிழகத்தின் தியாகச் சுடர்கள் என்ற நூல் வெளியீட்டு விழா மதுரை யாதவா மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. முன்னாள் எம்.பி., என்.எஸ்.வி.சித்தன் தலைமை வகித்தார். உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நூலை வெளியிட்டார்.
பின்னர் நீதிபதி பேசியது: “தமிழகத்தின் தியாகச்சுடர்கள் புத்தகத்தில் தியாகிகள் குறித்து எழுதப்பட்டுள்ளது. வாழ்க்கையை திசை திருப்பக்கூடிய விஷயங்களை நோக்கி செல்லாமல் இருப்பது சிறப்பானது. சினிமா, டிவி, செல்போன் என வாழ்க்கையை திசை திருப்பும் கெட்டப் பழக்கங்கள் உள்ளன. மது குடிப்பதும் கூட கெட்ட பழக்கம் தான். இந்த கெட்ட பழக்கங்களை தியாகம் செய்தால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு போக முடியும். எனவே, சொந்த வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய கெட்டப்பழக்கங்களை தியாகம் செய்ய வேண்டும்,” என்றார்.