

மதுரை: மதுரை மாநகராட்சியில் 60 வயது பூர்த்தியடைந்து இன்று (ஜூலை 1) ஒய்வு பெற்ற கடைசி நாளில், தனது சொந்த செலவில் டாடா ஏஸ் வாகனமும், சாக்கடை அடைப்பை சரி செய்யும் கழிவு நீர் உறிஞ்சும் மோட்டார் மற்றும் கழிவு நீர் குழாய்களையும் வாங்கி கொடுத்து நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
சென்னைக்கு அடுத்து பெரிய மாநகராட்சியாக மதுரை செயல்படுகிறது. இந்த மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களையும் சேர்த்து மொத்தம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இதனால், தினந்தோறும் யாராவது ஒருவர் ஒய்வு பெற்றுக் கொண்டு இருப்பார்கள். மாநகராட்சியும் பெரிய நிதி நெருக்கடியில் இருந்து வந்தாலும், ஓய்வு பனப்பலன்களை அவர்களுக்கு நிறுத்தி வைக்காமல், தற்போது உடனுக்குடன் வழங்கி வருகிறது.
அந்த வகையில் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் உதவி ஆணையருக்கு டிரைவராக பணிபுரிந்து வந்த ஜி.மனோகரன், 32 ஆண்டுகள் பணிபுரிந்து இன்று ஒய்வு பெற்றார். அவர் தனது மனைவி மற்றும் மகன், மகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் மேயர் இந்திராணி, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.
பொதுவாக இதுபோல் ஒய்வு பெறும் ஊழியர்கள், ஒய்வுபெறும் நாளில் மாநகராட்சி நிர்வாகத்திடம் தங்களுடைய ஒய்வு பனப்பலன்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தும், தன்னுடைய குடும்பச் சூழல்களை உருக்கமாக சொல்லியும் முறையிடுவார்கள். ஆனால், இன்று ஒய்வு பெற்ற டிரைவர் மனோகரன், மேயர் இந்திராணியிடம், “மேடம், எனக்கு வாழ்வு கொடுத்த, இத்தனை ஆண்டு காலம் என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றிய மாநகராட்சிக்கு ஒய்வு பெறும் நாளில் ஏதாவது செய்யனும் என்று நினைத்தேன்.
அதனால், மாநகராட்சியில் தற்போது வாகனங்கள் பற்றாக்குறை இருப்பதால் என்னுடைய சிறு உதவியாக, சொந்த செலவில் தடவாளப்பொருட்கள் எடுத்து செல்வதற்கு ஒரு மினி லாரியும், கழிவு நீர் மற்றும் மழைநீரை உறிஞ்சி வெளியேற்றுவதற்காக ஒரு மோட்டாரும், கழிவு நீர் குழாய்களையும் வாங்கி வந்துள்ளேன். அதனை பெற்றுக் கொள்ளுங்கள், ” என்றார்.
இதை சற்றும் எதிர்பராத மேயர் இந்திராணி, அவரையும், அவரது குடும்பத்தினரையும், தனது அறைக்கு வரவழைத்து, வாழ்த்து தெரிவித்தார். மாநகராட்சி மீது அவர் வைத்திருக்கும் பற்றையும், கடமையையும் வியந்து பாராட்டினார். பணிநிறைவு காலத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும்படியும், உங்களை முன்னோடியாக கொண்டு மற்ற ஊழியர்களும் மாநகராட்சி மீது இந்த அக்கறையும், இதுபோன்ற உதவிகளையும் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இதுகுறித்து டிரைவர் மனோகரன் கூறுகையில், “92-ம் ஆண்டு ஜூனில் மாநகராட்சியில் பணியில் சேர்ந்தேன். எத்தனையோ அதிகாரிகளுக்கு வாகனம் ஓட்டியுள்ளேன். ஒரு விபத்து கூட இதுவரை ஏற்படுத்தியது இல்லை. அவர்களை பாதுகாப்பாக கொண்டு சென்று இறக்கி விட்டுள்ளேன். வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டுவதற்காக, நான் எந்த கெட்டப் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. இந்த வேலைதான், எனக்கு நல்ல பழக்கத்தை கற்றுக் கொடுத்தது. குடும்பத்துக்காக உழைக்கவும் வைத்தது. மாநகராட்சி வழங்கிய ஊதியத்தில்தான் நானும், எனது குடும்பமும் இன்று நன்றாக இருக்கிறோம். என்னோ மகனை பி.இ., மகளை எம்.இ.,படிக்க வைத்துள்ளேன். அவர்களும் நல்ல நிலையில் உள்ளனர்.
மனநிறைவுடன் ஒய்வு பெறுகிறேன். இதற்கு மேல், ஒரு கடைநிலை மாநகராட்சி ஊழியனுக்கு என்ன வேண்டும். அந்த நன்றி கடனாகத்தான், ஒய்வு பெறும் நாளில் ஏதாவது மாநகராட்சிக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த டாடா ஏஸ் செகண்ட் கேண்ட் வாகனத்தையும், மோட்டார் போன்ற பொருட்களை வாங்கி கொடுத்துள்ளேன். ஆய்வுக்கு செல்கிற இடங்களில் சாக்கடை நீர் அடைப்பு ஏற்பட்டு அதனை அகற்றுவதற்கு அதிகாரிகளும், தூய்மைப் பணியாளர்களும் படுகிற சிரமத்தை தினமும் பார்க்கிறேன். அதற்காக கழிவு நீர் உறிஞ்சும் மோட்டார் வாங்கி கொடுத்துள்ளேன்,” என்றார்.