

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழ்வாய்வில் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் அகல்விளக்கு, சுடுமண்ணாலான கிண்ணத்தின் அடிப்பகுதி, சதுரங்க விளையாடு ஆட்டக்காய் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முன்னதாக, கண்ணாடி மணிகள், கல்மணிகள் மற்றும் பழங்கால செங்கற்கள், சிகை அலங்காரத்துடன் பாவையின் தலைப்பகுதி போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உடைந்த நிலையில் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் அகல்விளக்கு, சுடுமண்ணாலான கூம்பு வடிவ கிண்ணத்தின் அடிப்பகுதி, சதுரங்கம் விளையாடும் ஆட்டக்காய், சில்வட்டு ஆகியவை இன்று கண்டெடுக்கப்பட்டன.
தற்போது நடைபெறும் அகழாய்வு தளத்தில் கிடைக்கப்பெறும் தொன்மையான பொருட்கள் தொன்மையான மனிதர்களின் வாழ்விடப் பகுதியாக இருப்பதற்கான சான்றாக அமைந்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.