

எர்ணாகுளம்: ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்பதை பலரும் பல்வேறு தருணங்களில் தங்களது வாழ்வின் அனுபவங்களின் மூலம் பெற்றிருப்போம். அப்படியொரு அனுபவத்தை பெற்றுள்ளார் கேரளாவை சேர்ந்த எழுத்தாளர் ரீஸ் தாமஸ்.
மலையாள மொழி சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் இவர், தற்போது ‘90ஸ் கிட்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் தற்போது கேரளாவின் மூவாட்டுப்புழாவில் அமைந்துள்ள நியூ காலேஜ் புத்தக கடையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தப் புத்தகக் கடைக்கும், ரீஸ் தாமஸுக்கும் நீண்ட நெடும் பந்தம் இருப்பதாக தெரிகிறது. அதன் நினைவுகளை அவரே பகிர்ந்தார். “நான் அப்போது 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஹாரி பாட்டர் புத்தக வரிசையில் ‘தி டெத்லி ஹாலோஸ்’ வெளியாகி இருந்தது.
அதை நான் பெறுவது குறித்து நண்பர்களுக்குள் சவால் எழுந்தது. என்னால் அது முடியாது என சொன்னார்கள். ஏனென்றால் புத்தகத்தை திருட வேண்டுமென்பது தான் சவால். நான் அந்தப் புத்தகத்தை அந்தக் கடையில் இருந்து தட்டித் தூக்கினேன்” என்கிறார் ரீஸ் தாமஸ்.
தற்போது அவர் எழுதிய புத்தகம் அதே கடையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு தாமஸ் சென்றதும் அந்த பழைய சம்பவத்தை புத்தக கடைக்காரருடன் பகிர்ந்துள்ளார். அந்தப் புத்தகத்துக்கான தொகையையும் செலுத்த முன்வந்துள்ளார். ஆனால், அதனை கடைக்காரர் வாங்க மறுத்துள்ளார்.
“அது 2007-ல் நடந்தது. வேலையில் வருமானம் ஈட்டும் போதெல்லாம் புத்தகத்துக்கான தொகையை கொடுக்க வேண்டுமென நினைத்துள்ளேன். ஆனால், இங்கு வருவதற்கான துணிவை நான் கொண்டிருக்கவில்லை. இப்போது எனது புத்தகம் இங்கு விற்பனை ஆகிறது. அந்த தைரியத்தில் நண்பருடன் இங்கு வந்தேன்” என தாமஸ் தெரிவித்தார்.
90ஸ் கிட் புத்தகத்தின் தனது ஃபேஸ்புக் பதிவுகளை தொகுத்து புத்தகமாக அவர் வெளியிட்டுள்ளார். “அந்த நாட்கள் மிகவும் அற்புதமானது. உலகில் தொழில்நுட்பத்தின் வாசம் பரவலாக இல்லாத காலம். எனது பால்யமும் அந்த நாட்களில் தான் இருந்தது. அதனால் இந்த புத்தகத்துக்கு இந்த தலைப்பு” என அவர் தெரிவித்தார்.
இதில் தனது பயண அனுபவங்களை எழுதியுள்ளார். தனக்கு பிடித்த எழுத்தாளர்கள் வசித்த வீட்டுக்கு சென்ற விசிட், மும்பையின் மராத்தா மந்திரில் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ படத்தை பார்த்தது போன்ற அனுபவங்களை இதில் அவர் பகிர்ந்துள்ளார்.