இன்று உலக மாதவிடாய் சுகாதார தினம்: பெண்கள் சுகாதாரத்தை கவனத்தில் கொள்வது அவசியம்

இன்று உலக மாதவிடாய் சுகாதார தினம்: பெண்கள் சுகாதாரத்தை கவனத்தில் கொள்வது அவசியம்
Updated on
1 min read

சென்னை: உலக மாதவிடாய் சுகாதார தினம் ஆண்டுதோறும் மே 28-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேசுவதில் உள்ளதயக்கத்தை போக்குவதற்கும், தவறான புரிதல்களை களையவும், சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஜெர்மனியில் உள்ள வாஷ் யுனைடெட் தொண்டு நிறுவனத்தால் 2013-ம் ஆண்டு மாதவிடாய் தினம் தொடங்கப்பட்டு, 2014-ம்ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் மாதவிடாய் சுகாதார தினத்தின் கருப்பொருள் ‘மாதவிடாய்க்கு இணக்கமான உலகம்’ என்பதாகும். மாதவிடாய் சுகாதார தினம்குறித்து சென்னை எழும்பூர் அரசு தாய் - சேய் நல மருத்துவமனையின் இயக்குநர் கே.கலைவாணி கூறியதாவது: பெண்களுக்கு மாதவிடாய் என்பது 28 முதல் 35 நாட்களுக்குள் சுழற்சி முறையில் நடைபெறக்கூடியது.

மாதவிடாய் 3 நாட்கள் முதல் ஐந்து நாட்கள் இருக்கும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சுகாதாரம் முக்கியம் என்பதால் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அந்த காலங்களில் மாதவிடாய் காலத்தில் வீட்டில் உள்ள பழைய துணிகளை கிழித்து பயன்படுத்தி வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் சானிட்டரி நாப்கின், டாம்பூன், மென்ஸ்ட்ருவல் கப் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். பள்ளிகளிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது.

துணிகளை பயன்படுத்துவது சுகாதாரமற்ற முறையாகும். இதனால், தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், மாதவிடாய் காலத்தில் யாரும் துணிகளை பயன்படுத்த வேண்டாம். மாதவிடாய் காலத்தில் சுகாதாரம் முக்கியம் என்பதை ஒவ்வொரு பெண்ணும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி, கை, கால்களில் வலி போன்ற உடல் உபாதைகள் இருக்கும். அதனால், பயப்பட வேண்டாம். மாதவிடாய் காலம் முடிந்தவுடன் சரியாகிவிடும். அதிகமான வலி இருந்தால் மருத்துவரை அணுகலாம். வழக்கமாக சாப்பிடும்உணவுகளை சாப்பிடலாம்.

அதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. சிறிய அளவிலான உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். யோகா செய்யலாம். வழக்கமாக மேற்கொள்ளும் செயல்பாடுகளை மாற்ற வேண்டியதில்லை.

அந்த காலத்தில் மாதவிடாய் காலத்தில் வலி இருப்பதாலும், சோர்வாக காணப்படுவார்கள் என்பதாலும், எந்த வேலையையும் செய்ய விடாமல் தனிமைப்படுத்தி கொள்ள சொன்னார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in