Published : 27 May 2024 05:37 PM
Last Updated : 27 May 2024 05:37 PM

ஜமாத் நிலத்தை கோயில் கட்ட தானமாக வழங்கிய முஸ்லிம்கள் - திருப்பூரில் நெகிழ்ச்சி

திருப்பூர்: ஜமாத் நிலத்தை கோயில் கட்ட முஸ்லிம்கள் தானமாக வழங்கிய மதங்களை கடந்த மனிதம் தழைக்கும் சம்பவம் திருப்பூர் அருகே நடைபெற்றுள்ளது.

திருப்பூர் அருகே கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரோஸ்கார்டன் முஸ்லிம் ஜமாத் சார்பில் பள்ளிவாசல் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் வாழும் இந்துக்களுக்கு விநாயகர் கோயில் கட்டுவதற்கு இடம் இல்லாத நிலையில், ஜமாத்துக்கு சொந்தமான நிலத்தை கேட்டு இந்து மக்கள் அணுகினர். இதையடுத்து 3 சென்ட் நிலத்தை இந்துக்கள் கோயில் கட்டி வழிபட தானமாக தர முஸ்லிம்கள் மனமுவந்தனர். இதையடுத்து, உரிய முறையில் தானம் தரப்பட்டு தற்போது கோயில் கட்டும் பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரோஸ்கார்டன் முஸ்லிம் ஜமாத் அமைப்பினர் கூறும்போது, ''இங்கு முஸ்லிம் மக்கள் வழிபட மசூதி உள்ளது. ஆனால் இந்துக்கள் வழிபட கோயில் இல்லை. கோயில் கட்ட நிலம் கேட்டனர். இதையடுத்து தானமாகவே 3 சென்ட் நிலத்தை வழங்கினோம். ஏற்கெனவே இந்தப் பகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் ராம்ஜான் பண்டிகைக்கு விருந்து தருவோம். அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு உள்ளிட்டவை தந்து உபசரிப்பார்கள்.

தற்போது சுற்றுவட்டார பகுதியில் கோயில் எங்கும் இல்லாததால், இந்த பகுதியில் வாழும் மக்கள் கோயிலுக்கு நெடுந்தூரம் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஜமாத்துக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினோம்'' என்றனர்.

இந்து மக்கள் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ''கடந்த 13 ஆண்டுகளாக இந்த பகுதியில் கோயில் இல்லை. தற்போது முஸ்லிம் ஜமாத் சார்பில் இடம் தானமாக வழங்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயில் குடமுழுக்கு அன்று ஜமாத் சார்பில் முஸ்லிம்கள் பல்வேறு சீர்தட்டுகளுடன், மேளதாளம் முழங்க ஊர்வலம் வந்து அன்பை பகிர்ந்தனர்.

இது இருதரப்பிலும் நெகிழ்ச்சியை உண்டாக்கியது. அதேபோல் குடமுழுக்கு நாளில் இந்துக்களும், முஸ்லிம்களும் சேர்ந்து மதிய விருந்து கோயில் வளாகத்தில் சாப்பிட்டோம். இது இருதரப்பு ஒற்றுமையை மற்றவர்களுக்கு பறைசாற்றும் வகையில் இருந்ததாக, குடமுழுக்கு நிகழ்வுக்கு வெளியூரில் இருந்து வந்தவர்கள் பலர் தெரிவித்தனர்'' என்றனர். கோயில் கட்ட இந்துக்களுக்கு முஸ்லிம்கள் இடம் கொடுத்த இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பலரும் அதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x