

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் ஆய்வுப் பணிக்குச் சென்ற மீரட் மண்டல ஆணையரான செல்வகுமாரி சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்தார்.
இது தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த தமிழரான ஜே.செல்வகுமாரி, 2006-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். உ.பி. மாநிலப் பிரிவை சேர்ந்த இவர் தற்போது மீரட் மண்டல ஆணையராக உள்ளார்.
இந்நிலையில் மீரட்டின் பழைய நகரப் பகுதியில் இவர் ஆய்வு செய்ய வேண்டி இருந்தது. இங்குள்ள தெருக்கள் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குறுகலானவை. எனவே சிறிதும் தயங்காத செல்வகுமாரி, ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி ஆய்வுப் பணிக்கு புறப்பட்டார். இதனால் அவருடன் இருந்த மீரட் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் அபிஷேக் பாண்டேவும் மற்றொரு சைக்கிள் ரிக்ஷாவில் பின்தொடர வேண்டியதாயிற்று.
நேற்று வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பதால் அப்பகுதி தெருக்கள் மற்றும் சந்துகளில் இருக்கும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எனினும், சாலையிலிருந்த மக்கள் இந்தக் காட்சியை பார்த்து வியப்படைந்தனர். சிலர் இதனை தங்கள் செல்போன்களில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இப்படத்தை பார்த்தவர்களும் ஆணையர் செல்வகுமாரியின் நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர். ஏனெனில், வட மாநிலங்களில் இதுபோன்ற காட்சிகள் மிகவும் அபூர்வம் ஆகும்.
ஐஏஎஸ் அதிகாரியான செல்வகுமாரி இதுபோல் எளிய முறையில் பயணம் செய்தது இது முதல்முறையல்ல. இதற்கு முன் அவர் முசாபர்நகர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஆய்வுப் பணிக்காக மாட்டு வண்டியில் பயணம் செய்துள்ளார். அப்போதும் இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
உ.பி.யின் முக்கியமான கன்னோஜ், அலிகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஆட்சியராக செல்வகுமாரி பணியாற்றியுள்ளார். இதில் அலிகர் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். இவரது கணவரான ரன்வீர் பிரசாத் உ.பி.யின் 2000 ஆண்டு பேட்ச் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
தமிழ்நாடு மாநிலப் பிரிவில் பணியமர்த்தப்பட்ட பிரசாத், உ.பி. கேடர் அதிகாரி செல்வகுமாரியை மணம் முடித்ததால் பிறகு அம்மா நிலப் பிரிவில் சேர்ந்தார்.