Last Updated : 20 May, 2024 09:42 PM

3  

Published : 20 May 2024 09:42 PM
Last Updated : 20 May 2024 09:42 PM

தனது இறுதிச் சடங்குக்காக ரூ.10,000 சேமிப்பை முன்கூட்டியே தந்துவிட்டு உயிரிழந்த சேலம் மூதாட்டி!

மூதாட்டி பொன்னம்மாள்.

சேலம்: சேலத்தில் 92 வயதான ஆதரவற்ற மூதாட்டி, தான் இறந்தவுடன் தனக்கு இறுதிச் சடங்கு செய்திட, சிறுக சிறுக சேமித்து வைத்த ரூ.10 ஆயிரம் பணத்தை முன்கூட்டிய கொடுத்து விட்டு உயிரிழந்தார்.

ஒருவரின் இறப்பின் மூலமே அவர் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் தெரியும். ஆனால், ஒருவர் இறந்த பின்னர் அவரை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில், அரிய பல நற்செயல்களை செய்தால் மட்டுமே தெரியும். வாழும் காலத்தில் யாருக்கும் பாரமில்லாமல் வாழ்வது சிறப்பு என்றால், வாழ்ந்து முடிந்த பின்னர் பிறருக்கு சிரமம் கொடுக்காமல் இறப்பது மேன்மை. இதை மெய்ப்பித்து காட்டும் விதமாக, சேலத்தில் 92 வயது மூதாட்டி, தான் இறந்த பின்னர் இறுதி சடங்குக்கு முன் கூட்டியே சேமிப்பு பணத்தை கொடுத்த சென்ற சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

சேலம் அம்மாபேட்டை , மிலிட்டரி ரோடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மனைவி பொன்னம்மாள் என்ற பெத்தாயி (92). இவர், தனது கணவர் மாணிக்கம் இறந்த பின்னர், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு, ஆதரவற்ற நிலையில் தனி ஆளாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். உடல் ஒத்துழைக்காத நிலையிலும், முதுமையை விஞ்சி, வீட்டு வேலைகள் செய்து பிழைத்து வந்த பொன்னம்மாள், சேமிப்பு பழக்கத்தை கைவிடவில்லை.

கிடைக்கும் சொற்ப கூலித் தொகையில் தனக்கான உணவு, மருத்துவ செலவு போக, எஞ்சிய சிறு தொகையை பல ஆண்டாக சேமித்து வந்ததில், ரூ.10 ஆயிரம் கையிருப்பு சேர்ந்தது. இந்நிலையில், வயதாகிவிட்ட நிலையில், பொன்னம்மாள் தனது ஆதரவற்ற நிலையால் கவலை கொண்டார். இறப்புக்கு பின்னர், இவ்வுடலக்கு இறுதி சடங்கு செய்திட யாரும் முன் வராமல், மாநகராட்சி வாகனத்தில் இடுகாட்டுக்கு செல்ல வேண்டியிருக்குமோ என்ற சோகம் பொன்னம்மாளின் மனதை வாட்டி வதைத்து வந்தது.

தான் இறந்த பிறகு, யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில் பொன்னம்மாள், தனது சேர்த்து வைத்த ரூ.10 ஆயிரத்தை, அவரது வீட்டருகே, இட்லி கடை நடத்தி வரும் சாவித்ரி என்பவரிடம் 6 மாதத்துக்கு முன்னரே கொடுத்து வைத்தார். அவரிடம், தான் இறந்த பிறகு, தான் கொடுத்த ரூ.10 ஆயிரத்தை வைத்து, தனக்கு இறுதி சடங்கினை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த பொன்னம்மாள் நேற்றிரவு (19-ம் தேதி) உயிரிழந்தார். இதனை அறிந்த சாவித்ரி, அப்பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் உள்ளிட்ட சிலரின் உதவியுடன், பொன்னம்மாள் சடலத்தை குளிர்பதனப் பெட்டியில் வைத்தார்.

பொன்னம்மாள் இறப்பு குறித்து அறிந்த அப்பகுதியின் வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம், உடனடியாக அமரர் ஊர்தி, மாலை ஆகியவற்றுடன் வந்து, பொன்னம்மாளின் சடலுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், ஜான்சன்பேட்டை காக்காயன் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று, பொன்னம்மாளின் சடலத்துக்கு முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்தார்.

அவரிடம், பொன்னம்மாள் முன் கூட்டியே வழங்கியிருந்த ரூ.10 ஆயிரத்தை சாவித்திரி வழங்கியபோது, அதனை வாங்க மறுத்த கவுன்சிலர் தெய்வலிங்கம், புனித நதியில் பொன்னம்மாளின் அஸ்தியை கரைக்க அப்பணத்தை செலவிடும்படி கூறினார். இதையடுத்து, மணி உள்ளிட்டோர் பொன்னம்மாளின் அஸ்தியை மேட்டூர் எடுத்துச் சென்று, காவிரி ஆற்றில் கரைத்து, பிரார்த்தனை செய்தனர். ஆதரவற்ற மூதாட்டியின் கடைசி ஆசையை, பல நல் உள்ளங்கள் இணைந்து நிறைவேற்றியதை மக்கள் பாராட்டியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x