

ஏலூரு: ஆந்திர மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவ சிகிச்சைக்கு சுமார் 6 கி.மீ. தூரம் வரை கயிற்றுக் கட்டிலுடன் சுமந்து சென்றனர்.
ஆந்திராவில் ஏலூரு பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் லச்சபேட்டை எனும் குக்கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் சுமார் 6 கி.மீ.தூரம் நடந்து சென்றுதான் இவர்கள் பேருந்தில் பயணிக்க முடியும்.
இந்த கிராமத்தை சேர்ந்த சிரமைய்யா என்பவரின் மனைவி கோஷி (24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வெள்ளிக்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அக்கிராமத்தினர் சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் ஒரு செவிலியரை அனுப்பி வைத்தனர். கோஷியை நேரில் வந்து பார்த்த செவிலியர், சுகபிரசவத்துக்கு வாய்ப்பில்லாததால், கண்டிப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
இதையடுத்து வேறு வழியின்றி, கர்ப்பிணி கோஷியை ஒரு கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்து, அதனை நீண்ட மூங்கலில் கட்டி, இருபுறமும் ஆண்கள் சுமந்தபடி 6 கி.மீ. தூரம் வரை சென்றனர். பிறகு அங்கிருந்து ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.
அப்பெண்ணின் உறவினர்கள் கூறும்போது, “ஒவ்வொரு முறையும் எங்களுக்கு இதே நிலை தான் ஏற்படுகிறது. ஆட்சிக்கு வரும் புதிய அரசாவது இம்முறை எங்கள் ஊருக்கு சாலை வசதியும் மருத்துவமனையும் கட்டாயம் அமைத்து தரும் என நம்புகிறோம்” என்றனர்.
இதற்கிடையில் மருத்துவமனையில் கோஷிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.