

மாசசூசெட்ஸ்: அல்ட்ரா ப்ராஸஸ்டு ஃபுட் (Ultra-Processed Food - பதப்படுத்தப்பட்ட உணவு) உணவை உட்கொள்ளும் நபர்கள் எதிர்கொள்ளும் ரிஸ்க் குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை அண்மையில் வெளியானது. இதில் சுமார் 1.14 லட்சம் பேர் பங்கேற்றனர். சுமார் 30 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக அல்ட்ரா ப்ராஸஸ்டு ஃபுட் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரெடி-டு-ஈட் வகையிலான இறைச்சி உணவு, கடல் வாழ் உயிரினங்கள் சார்ந்த உணவு, இனிப்பு கலந்த பானங்கள், பால் சார்ந்த உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட காலை உணவுகளுடன் இதற்கு அதிக தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் வீடுகளில் தயார் செய்யப்படும் உணவுகளில் செயற்கை நிறமூட்டிகள், இனிப்பு போன்றவை சேர்க்கப்படாது. ஆனால், ரெடி-டு-ஈட் உணவுகளில் இவை அதிகம் காணப்படும். அதோடு இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து இருக்காது. மாறாக கொழுப்புகள் அதிகம் இருக்கும். இந்த ஆய்வு ‘தி பிஎம்ஜே’-வில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வகை உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளும் வழக்கம் கொண்டவர்களின் ஆயுட்காலம் 13 சதவீதம் குன்றுவதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆய்வின் போது புற்றுநோய், இதய நோய், சுவாசக் கோளாறு சார்ந்த நோய் மற்றும் நரம்பியல் ரீதியான பாதிப்புகளுக்கு பலர் ஆளானதாகவும். அதனால் உயிரிழந்துள்ளதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வகை உணவுகளை மக்கள் அதிகம் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த அல்ட்ரா ப்ராஸஸ்டு ஃபுட் சார்ந்து மேற்கொள்ளப்பட்டு ஆய்வுகளில் மனநலப் பிரச்சினை, நீரிழிவு பாதிப்புக்கு மக்கள் ஆளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.