பழநி கோயிலுக்கு 6 கிராமங்களை கொடையாக அளித்த சிவகங்கை அரசர்: 18-ம் நூற்றாண்டு செப்பேட்டில் தகவல்

பழநியில் செப்பேட்டுடன் மலைக்கோயில் திருமஞ்சனப் பண்டாரம் சண்முகம்,  தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்டோர். ( அடுத்தப்படம் ) பழநியில் கண்டெடுக்கப்பட்ட 18-ம் 
நூற்றாண்டு செப்பேடு.
பழநியில் செப்பேட்டுடன் மலைக்கோயில் திருமஞ்சனப் பண்டாரம் சண்முகம், தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்டோர். ( அடுத்தப்படம் ) பழநியில் கண்டெடுக்கப்பட்ட 18-ம் நூற்றாண்டு செப்பேடு.
Updated on
1 min read

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடு கண் டெடுக்கப்பட்டது.

பழநி மலைக்கோயில் திருமஞ்சனப் பண்டாரம் சண்முகம் என்பவர் வைத்திருந்த செப்பேடு குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி, கணியர் ஞானசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இது குறித்து நாராயணமூர்த்தி கூறியதாவது: இச்செப்பேட்டை தர்மராய பிள்ளை மகன் சொக்கு என்பவர் எழுதியுள்ளார். இச்செப்பேடு சிவகங்கை சீமையின் அரசர் விசைய ரகுநாத பெரிய உடையாத் தேவர், பழநி முருகனுக்கு அளித்த பூதானம் எனும் நிலக்கொடையை பற்றிக் கூறுகிறது.

செப்பேட்டை சிவகங்கை அரசர், பழநியில் வசிக்கும் காசி பண்டாரத்தின் மகன் பழனிமலை பண்டாரத்துக்கு வழங்கி உள்ளார். பழநி முருகனுக்கு திருக்காலச் சந்தியில், திருவிளக்கு, திருமாலை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகியவை நடப்பதற்காக, தம்முடைய ஆட்சிப் பகுதியில் இருந்த முசுட்டாக்குறிச்சி, பெத்தானேந்தல், தேசிகனேந்தல், நாயனேந்தல், மருகதவல்லி, சின்னக் குளம் ஆகிய 6 ஊர்களை வரிகள் நீக்கி சர்வ மானியமாகக் கொடுத்துள்ளார்.

கொடையாக அளிக்கப்பட்ட கிராமங் களின் நான்கு எல்லைகளை செப்பேடு விரிவாகக் கூறுகிறது. செப்பேட்டில் மயில், சூரிய சந்திரர்களுக்கிடையே வேல், அரசரின் உருவம் பொறிக்கப் பட்டுள்ளது. இந்த செப்பேடு 44 செ.மீ உயரம், 25 செ.மீ அகலம், 875 கிராம் எடையுடன் உள்ளது. செப்பேட்டின் இருபுறமும் 100 வரிகளில் எழுதப்பட்டுள்ளது.

இச்செப் பேட்டின் முன்பக்கம் விசைய ரகுநாத பெரிய உடையாத் தேவரின் 123 பட்டங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பின்பக்கம் 65-வது வரிக்கு இடையில் தெலுங்கு மொழியில் ‘ஆறுமுக ஸகாயம்' என்று எழுதப்பட்டுள்ளது. இது ஓர் ஆய்வுக் குரிய விஷயமாகும். செப்பேட்டின் இறுதியில், இந்த தர்மத்தை பரிபாலனம் பண்ணிய பேர்கள் அடையுக்கூடிய புண்ணியத்தையும், கெடுதல் செய்தவர்கள் அடையும் தோஷத்தையும் பற்றிய விரிவான செய்திகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in