மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கிருஷ்ணகிரி உரூஸ் திருவிழாவில் சீர்வரிசை வழங்கிய இந்துக்கள்
கிருஷ்ணகிரி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் நடந்த உரூஸ் திருவிழாவில் இந்துக்கள் சீர்வரிசை வழங்கி உற்சாகமாக கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி டோல் கேட் அருகே உள்ள சங்கல் தோப்பு தர்காவில், ஆண்டு தோறும் ரம்ஜான் பண்டிகை முடிந்த பின்பு 2 நாட்கள் உரூஸ் திருவிழா நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் தொடங்கிய விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தர்கா கமிட்டி தலைவர் நவாப் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் இரண்டாவது நாளில் கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டைப் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், சந்தனக்குடம் ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக சென்றது.
இந்த சந்தனக்குட வாகனம், அதிகாலையில் கிருஷ்ணகிரி சங்கல் தோப்பு தர்காவை அடைந்தது. அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஊர்வலத்தில் கொண்டு வந்த சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கோட்டை பகுதியைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் என ஏராளமானோர் சந்தனம், புஷ்பம், பழங்கள் அடங்கிய சீர்வரிசைகளை கொண்டு வந்து இஸ்லாமியர்களுக்கு வழங்கினர்.
அந்தப் பொருட்கள் அனைத்தையும் சந்தனக்குடம் ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்பட்டு தர்காவுக்கு கொண்டு சென்றனர். தர்கா கமிட்டி நிர்வாகிகள் கவுஸ்ஷெரிப், அஸ்கர்அலி, அமீர்சுஹேல் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
