Published : 24 Apr 2024 04:02 AM
Last Updated : 24 Apr 2024 04:02 AM

கள்ளழகர் சித்திரை திருவிழாவை காண திரண்ட மக்கள்

சித்ரா பவுர்ணமியான நேற்று மதுரை வைகையாற்றில் பச்சை பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: *சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக மதுரை வைகை ஆற்றுக்குள் வீரராகவப்பெருமாள் எழுந்தருளும் சந்திப்பு மண்டபம், இந்து சமய அறநிலையத் துறை மண்டகப்படி அமைக்கப்பட்டிருந்தது.

* சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து இந்துசமய அறநிலையத்துறையினரை பாராட்டிய உயர் நீதிமன்றம், மண்டகப் படிக்குள் 2,400 பேரை மட்டும் அனுமதிக்க உத்தரவிட்டது. ஆனால், சுமார் 5,000 பேருக்குமேல் திரண்டதால் போலீஸார் திணறினர்.

* கள்ளழகர் இறங்கும் பாலத்துக்கு கீழ் ஓடிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தனர்.

*வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதற்காக சிமென்ட் தொட்டி அமைக்கப்பட்டு, அதில் தாமரை மலர்கள் மிதக்க விடப்பட்டிருந்தது காண்போரை கவர்ந்தது. அதில் பக்தர்கள் சிலர் கதம்ப மலர்களையும் தூவினர். ஆற்றில் ஓடும் கழிவுநீரிலிருந்து துர்நாற்றம் வீசியதால் நறுமணப் பொருட்கள் தெளிக்கப்பட்டிருந்தன.

* கள்ளழகர் சிறப்பு குறித்து ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையர் குணசுந்தரம் உள்ளிட்டோர் அழகாக வர்ணனை செய்தது பக்தர்களை கவர்ந்தது.

* கடந்தாண்டுகளில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்ததால் இந்தாண்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் கூடுதல் கவனத்துடன் செய்யப்பட்டிருந்தன. ஐஜி கண்ணன் மேற்பார்வையில், காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* பக்தர்கள் கோரிப்பாளையத்திலிருந்து கூட்ட நெரிசலின்றி வைகை ஆற்றுக்குள் செல்லும்வகையில் இரும்புத் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

* வழக்கம்போலவே அரசு துறை உயரதிகாரிகள், காவல்துறை, நீதித்துறை உயர் அதிகாரிகளை பாதுகாப்புடன் வைகை ஆறு மண்டகப்படிக்குள் அழைத்துச் செல்வதில் கவனம் செலுத்தினர். அனுமதி பெற்ற பக்தர்களை உள்ளே அனுப்புவதில் கெடுபிடி காட்டினர்.

* வைகை ஆற்றுக்குள் மண்டகப்படிகளை சுற்றி, கடந்தாண்டைவிட கூடுதல் பரப்பளவில் வேலி அமைத்து பக்தர்களை நெருங்க விடாமல் செய்தனர். இதனால் அழகரை நெருக்கத்தில் காண முடியவில்லை என சுற்றியிருந்த பக்தர்கள் போலீஸாருக்கு எதிராக கோஷமிட்டனர்.

* கள்ளழகரை பக்தர்கள் காணும் வகையில் ஏ.வி. மேம்பாலத்தில் பக்தர்கள், மாற்றுத் திறனாளிகளை 5.30 மணிக்கு மேல் அனுமதித்தனர். அதேபோல் சிம்மக்கல் கல்பாலம், குருவிக்காரன் சாலை பாலத்தில் பக்தர்கள் திரளாக காத்திருந்தனர். வைகை ஆற்றுக்குள் பக்தர்கள் இறங்கும் வகையில் படிக்கட்டு வசதிகள் செய்யப் பட்டிருந்தன.

* வைகை ஆற்றுக்குள் தண்ணீர் தேங்காதவாறும், அதில் பக்தர்கள் இறங்காத வகையில் தீயணைப்பு வீரர்கள் கண்காணித்தனர். மேலும் இயந்திரம் மூலம் மேடு பள்ளங்களை சரி செய்து கொண்டிருந்தனர்.

* வைகை ஆற்று மண்டகப்படிக்குள் நீதித்துறையினர் வருவதற்குமுன் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் இருக்கை களில் அமர்ந்து இடம் பிடித்தனர்.

* ஆற்றில் இறங்கும் கள்ளழகரை அரசுத்துறை அதிகாரிகள் சிரமமின்றி தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன, ஆனால் சாமானிய பக்தர்கள், நெருங்க முடியாத வகையில் கெடுபிடி செய்ததாக ஆதங்கம் தெரிவித்தனர்.

* மாநகர் காவல் துறை சார்பில் 100 சிசிடிவி கேமராக்கள், உயர் கோபுரங்கள், குதிரைப்படை போலீஸார் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x