Published : 22 Apr 2024 02:32 PM
Last Updated : 22 Apr 2024 02:32 PM

உடலின் நீரிழப்பு பாதிப்பை குறைக்கும் இளநீர் தரும் நன்மைகள் | கோடை ஸ்பெஷல்

இயற்கையின் அருட்கொடை: கோடைக்காலம் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெயிலுக்கு ஏற்ப நம் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கு இயற்கை பலவிதமான அற்புதங்களை நமக்கு வழங்கியிருக்கிறது.

அவற்றுள் முக்கியமானது இளநீர். இது தென்னையின் அருட்கொடை. இளநீர் குளுமையான தித்திப்பான பானம் ஆகும். இதில் சோடியம், கால்சியம், குளுகோஸ், புரதம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. நூறு கிராம் இளநீரில் 17.4 சதவீதம் உள்ளது.

இளநீரின் நன்மைகள்: இளநீர் தாகத்தைப் போக்கிப் புத்துணர்ச்சியை அளிக்கும் குளுமையான பானம். இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். பசியைத் தூண்டும். பித்தவாதத்தைக் குணப்படுத்தும். அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. இதன் மூலம் இளநீர் உடல் சூட்டைத் தணித்துக் குளிர்ச்சியைத் தரும். இளநீர் குடல் புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. இளநீர் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை கொண்ட பானமாகும்.

அதனால் காலரா நோயாளிகளுக்கு இது ஏற்ற பானம். ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சரி செய்கிறது. சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல் படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க ஏற்ற பானம். மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

இளநீர் நல்லது ஏன்?: “கோடையில் குடிக்க இளநீர்தான் மிகச் சிறந்த பானம். சத்தான, சுத்தமான பானம். இளநீர் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இளநீரைத் தண்ணீரில் போட்டு வைத்து, ஒரு மணி நேரம் கழித்து வெட்டிக் குடித்தால், குளிர்ந்து இருக்கும். மாறாக, இளநீரைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சில மணி நேரம் கழித்துக் குடித்தால், இளநீரின் மருத்துவக் குணங்கள் மாறிவிடும்.

இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்ப நிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீரிழப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன” என்கிறார் மருத்துவர் கு.கணேசன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x