

பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, அந்த நகரில் மூன்று ஏரிகளை மீட்டமைத்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏரிகளை மேம்படுத்தும் நோக்கிலான திட்டத்தை முன்னெடுத்தது ஆர்சிபி அணி. நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஏரியை தூர்வாரி, மேம்படுத்துவது இந்த திட்டத்தின் பிரதான நோக்கம். ஆர்சிபி அணியின் கோ கிரீன் முன்மாதிரி முயற்சியின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் காவிரி நீர் கிடைக்கப்பெறாத மற்றும் நிலத்தடி நீரை ஆதாரமாக நம்பியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள இட்கல்புரா மற்றும் சடேனஹள்ளி ஏரிகளில் முதல்கட்ட பணிகள் துவங்கப்பட்டன. அதன் மூலம் இந்த இரண்டு ஏரிகளிலும் சுமார் 1.20 லட்சம் டன் அளவிலான வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளது. சுமார் 9 ஏக்கர் பரப்பிலான ஏரி நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு ஏரிகளின் பரப்பளவும் கூடியுள்ளது.
அதோடு நீர்நிலை சார்ந்து வாழும் பறவைகள் மற்றும் விலங்குகள் பலன் அடைந்துள்ளன. இது மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதாயம் தரும் வகையில் அமைந்துள்ளது என ஆர்சிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பணிகளை கண்ணூர் ஏரியில் மேற்கொண்டுள்ளது ஆர்சிபி. இந்த ஏரிகள் அருகாமையில் அமைந்துள்ள கிராமங்களுக்கு மிக முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. விரைவான வளர்ச்சியை கண்டு வரும் பெங்களூரு நகரின் நீர் ஆதாரம் சார்ந்த உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பின்னடைவே தற்போது நிலவும் நீர் பற்றாக்குறைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.