

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி வசித்து வந்த மண் வீடு, மழையில் கரைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக அவர் கழிவறையை தனது கூடாக மாற்றி அடைக்கலம் கொண்டுள்ளார். திறந்தவெளியில் மலம் கழிப்பதை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் அரசு இந்த கழிவறையை கட்டிக் கொடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தை சேர்ந்தவர் 66 வயதான மிதிலா மஹதோ. தற்போது 4-க்கு 3 அடி அளவுள்ள கழிவறை தான் இப்போது அவரது வசிப்பிடம். கணவரை இழந்தவர். அவரது பிள்ளைகள் வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். அதனால் ஒற்றை ஆளாக தனது கிராமத்தில் வசித்து வருகிறார். இந்தச் சூழலில் தான் கடந்த ஆண்டு அவர் வசித்து வந்த மண் வீடு, கனமழையில் கரைந்துள்ளது.
உள்ளூர் பிரதிநிதிகள் தரப்பில் உதவி கோரியுள்ளார். ஆனால், அவருக்கு கிடைத்தது தற்காலிக தீர்வு மட்டுமே. இறுதியில் சுகாதார நோக்கில் கட்டப்பட்ட கழிவறையில் அடைக்கலம் கொண்டுள்ளார். மிகவும் குறுகிய அந்த இடத்தில் அமர்வதே சவாலாக உள்ள நிலையில் தான் அன்றாடம் அவர் உறங்கி வருகிறார்.
ஓராண்டுக்கு மேலாக இதனை சமாளித்து வரும் அவர், பலமுறை மாவட்ட நிர்வாகத்தில் முறையிட்டும் உதவி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். “நான் ஒரு வருடமாக இங்கு தான் வசித்து வருகிறேன். என்னால் வேறென்ன செய்ய முடியும்” என வேதனையுடன் மிதிலா சொல்கிறார்.
“மிதிலாவின் நிலை குறித்து எனக்கு தெரியவரவில்லை. யாரும் என்னிடம் அது குறித்து தெரிவிக்கவில்லை. அவர் என்னிடம் முறையிட்டதாகவும் தெரியவில்லை” என மிதிலா வசித்து வரும் கிராமத்தின் தலைவர் சொல்கிறார். அந்தப் பகுதியின் பஞ்சாயத்து தலைவர், மிதிலாவின் நிலைக்கு தற்காலிக தீர்வு உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
“பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி நேரடியாக மாநில நிர்வாகத்தின் வசம் செல்கிறது. இதில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-வின் பங்கு எதுவும் இல்லை. அப்படியென்றால் அந்த நிதி எங்கே செல்கிறது? ஏன் அந்த மூதாட்டிக்கு இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படவில்லை? இதனை விசாரிக்க வேண்டும்.
ஆட்சியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் என்ன செய்து கொண்டுள்ளார்?” என கேள்வி எழுப்பி உள்ளார் பாஜகவை சேர்ந்த புருலியா தொகுதியின் எம்.பி ஜோதிர்மயி சிங் மஹதோ.
இந்தச் சூழலில் மிதிலா, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கவில்லை என மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.