

புதுடெல்லி: தான் இந்திய வனத்துறை அதிகாரியாக உயர தனது நடுத்தர வர்க்க பெற்றோர் செய்த தியாகமே காரணம் என்று டெல்லியைச் சேர்ந்த இளம் குடிமைப்பணி அதிகாரி அனுபம் சர்மா எழுதிய எக்ஸ் பதிவு வைரலானது.
தாங்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை; தங்களது குழந்தைகள் படித்து முன்னேற வேண்டும் என்பதில் இந்திய பெற்றோர் கண்ணும் கருத்துமாக இருப்பது வழக்கம். அதிலும் குழந்தைகளின் கனவு நிஜமாக தங்களது கனவுகளையும் தியாகம் செய்யும் பெற்றோர் பலர் உள்ளனர். அந்த வகையில் தான் குடிமைப்பணி அதிகாரியாக உயர தனது பெற்றோர் செய்த தியாகம் குறித்து இந்திய வனத்துறை அதிகாரி அனுபம் ஷர்மா எக்ஸ் பதிவிட்டிருந்தார்.
அனுபம் சர்மா தன் வீட்டிலுள்ள பழைய ஏசி மெஷினுடைய புகைப்படத்தைப் பகிர்ந்து எழுதிய எக்ஸ் பதிவு பின்வருமாறு:
எனது பெற்றோர் இதுவரை வாங்கிய ஒரே ஏசி மெஷின் இதுதான். 10 வருடங்களுக்கு முன்பு 2014-ம் ஆண்டில் வாங்கினார்கள். சுட்டெரிக்கும் கோடைக்காலத்தின் வெக்கையில் கஷ்டப்படாமல் நான் சவுகரியமாகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் என்பதற்காக எனது படுக்கையறையில் இந்த ஏசியை எனது பெற்றோர் பொருத்தினார்கள். தங்களது குழந்தையின் எதிர்காலம் சிறக்க ஒரு நடுத்தர வர்க்க பெற்றோர் அன்று எடுத்த இந்த முயற்சியை இன்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
அனுபம் சர்மாவின் இந்த பதிவை பாராட்டி சமூக ஊடகத்தில் பலர் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். டெல்லி ஐஐடியில் பட்டம் பெற்றவர் அனுபம் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.