ரஷ்ய ராணுவத் தளத்தில் இருந்து 6 இந்திய இளைஞர்கள் தப்ப உதவிய கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் - நடந்தது என்ன?

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரின்ஸ், டேவிட் முத்தப்பன் ஆகிய இருவர் அண்மையில் வீடு திரும்பினர். இந்நிலையில், இதே பாணியில் ரஷ்ய ராணுவத்தின் வசம் சிக்கியிருந்த 6 இளைஞர்கள் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியினால் அங்கிருந்து தப்பியுள்ளனர். அவர்கள் 6 பேரும் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா சென்ற அவர்கள், ரஷ்யாவில் காவலர் பணி என ஏஜெண்ட் சொன்ன வார்த்தையை நம்பினர். இவர்கள் 6 பேரும் எளிய குடும்ப பின்புலத்தை கொண்டவர்கள். குடும்பத்துக்காக வருமானம் ஈட்டும் நோக்கில், கடன் பெற்று ரஷ்யா சென்றுள்ளனர்.

“நாங்கள் 6 பேரும் மாஸ்கோ சென்றோம். விமான நிலையத்தில் எங்களை அழைத்து செல்ல ஒருவர் வந்திருந்தார். அங்கிருந்து விடுதிக்கு சென்றோம். பின்னர் வடகிழக்கு பகுதியில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்துக்கு சென்றோம். அந்த இடத்துக்கு நாங்கள் பயணித்தபோது ரஷ்ய ராணுவத்தின் செக்யூரிட்டி இன்ஸ்டாலேஷனை கையாள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதற்காக வேண்டி மூன்று வார காலம் ராணுவ பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த நாளே எங்களிடம் ஒப்பந்த பத்திரம் ஒன்று கொடுத்தார்கள். அதில் விரைந்து கையெழுத்திடுமாறு தெரிவித்தனர். அது ரஷ்ய மொழியில் இருந்தது. நாங்கள் படித்த பிறகே கையெழுத்திடுவோம் என சொன்னோம். பின்னர் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியுடன் அதைப் படித்தோம். அதன் பிறகே நாங்கள் ராணுவத்தின் வலையில் சிக்கிய விவகாரம் தெரியவந்தது.

நாங்கள் உக்ரைனுக்கு எதிராக போரிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதை வெற்றிகரமாக நிறைவு செய்தால் ரஷ்ய குடியுரிமை கிடைக்கப் பெறும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அடுத்த நொடியே அது குறித்து யோசிக்காமல் ஒப்பந்த பத்திரத்தை கிழித்தெறிந்தோம். அதோடு நாடு திரும்ப விரும்புவதாக தெரிவித்தோம்” என நாடு திரும்பிய 6 இளைஞர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு அவர்கள் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கிருந்து கேரள ஏஜெண்ட் ஒருவரை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லியுள்ளனர். அதன்பிறகு விமானம் மூலம் பிப்ரவரி 26-ம் தேதி நாடு திரும்பியுள்ளனர். இதில் சிலர் நாடு திரும்பிய சூழலில் சொந்த ஊருக்கு செல்லாமல் வேலை தேடி வருகின்றனர். இவர்கள் மும்பையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா செல்வதற்காக வாங்கிய கடன் தொகை இதற்கு காரணம் என தெரிகிறது.

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. இப்போரில் ரஷ்யா சார்பில் ஈடுபட இந்தியர்கள் கட்டாயப்படுத்தப் படுவதாகவும். மறுப்பவர்கள் மீது பொய் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டுவதாக அங்கு சென்ற இந்தியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அங்கு சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்க வெளியுறவு அமைச்சகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in