

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் அமேசானின் அலெக்சாவை பயன்படுத்தி குரங்குகளிடம் இருந்து குழந்தையை காத்துள்ளார். அவரது செயலுக்காக பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுதலை பெற்று வருகிறார். இதற்கு முன்னர் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அவசர நேரத்தில் அதன் பயனர்களுக்கு உதவிய தருணங்கள் உள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாஸ்தி பகுதியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார் 13 வயதான நிகிதா. வீட்டின் ஓர் அறையில் சகோதரியின் 15 மாத குழந்தையுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். வீட்டின் கதவு திறந்திருந்த காரணத்தால் வீட்டுக்குள் குரங்குகள் கூட்டமாக நுழைந்துள்ளன. தரைதளத்தில் அதகளம் செய்த குரங்குகள், முதல் தளத்துக்கு தாவியுள்ளன. அங்குதான் ஓர் அறையில் குழந்தை இருந்துள்ளது.
சப்தம் கேட்டு நிகிதாவும், அவரது சகோதரியும் அறையில் இருந்து வெளிவந்து பார்த்துள்ளனர். அப்போது குழந்தை இருந்த அறைக்குள் குரங்குகள் நுழைந்துள்ளன. அதை பார்த்து குழந்தை அழுதுள்ளது. இருப்பினும் விரைந்து யோசித்த நிகிதா, ‘நாய் போல குரை’ என அலெக்சாவுக்கு கட்டளையிட்டுள்ளார். அலெக்சாவும் அதை அப்படியே செய்ய, அந்த ஒலியை கேட்ட குரங்குகள் ஒவ்வொன்றாக வெளியேறி உள்ளன.
“வீட்டுக்கு விருந்தினர் வந்திருந்தனர். அவர்கள் திரும்பி சென்றபோது கதவை திறந்தபடி விட்டு சென்றுள்ளனர். அதன் காரணமாக குரங்குகள் வந்துவிட்டன. வீட்டின் சமையல் அறையில் குரங்குகள் அட்டகாசம் செய்தன. அதைப் பார்த்து குழந்தை அழுதது. எனக்கும் குரங்குகளின் சேட்டையை பார்த்து கொஞ்சம் பயமாக தான் இருந்தது. அப்போது அறையில் அலெக்சா இருப்பதை கவனித்து, நாய் போல ஒலி எழுப்ப சொன்னேன். அதுவும் அப்படியே செய்ய குரங்குகள் வெளியேறின” என நிகிதா தெரிவித்துள்ளார்.
அலெக்சா: அமேசானின் அலெக்சா குறித்து அனைவரும் அறிந்திருப்போம். இதுவொரு ஸ்மார்ட் ஸ்பீக்கர். இணைய இணைப்பு வசதியுடன் இயங்கி வருகிறது. தமிழ் உட்பட பல்வேறு உலக மொழிகளில் அலெக்சா பேசி வருகிறது. விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் சொல்வது ஆகட்டும். விரும்பிய பாடலை பிளே செய்யவும். சமயங்களில் கதை சொல்லியாகவும் அலெக்சா உலக மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.