

சண்டிகர்: டெல்லியை அடுத்த சண்டிகரைச் சேர்ந்தவர் டாக்டர் தன்மே மோதிவாலா. குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணரான இவர், தனது குடும்ப சொத்து தொடர்பான ஆவணங்களை தேடி உள்ளார். அப்போது, பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) பங்கு சான்றிதழை கண்டெடுத்துள்ளார்.
இதுகுறித்து தன்மே தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “எனது தாத்தா 1994-ம் ஆண்டு ரூ.500-க்கு எஸ்பிஐ பங்குகளைவாங்கி உள்ளார். அதன் பிறகு அவர் இதை மறந்துவிட்டிருக்கிறார். இதை ஏன் வாங்கினோம் என்று கூட அவருக்கு தெரியவில்லை.
என் தாத்தா வாங்கி வைத்துள்ள ரூ.500 மதிப்பிலான எஸ்பிஐபங்கின் இப்போதைய மதிப்பு என்ன என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். டிவிடெண்ட் வருவாயை தவிர்த்து இதன் மதிப்பு மட்டும் ரூ.3.74 லட்சம் ஆகும். இது இப்போதைக்கு பெரிய தொகை இல்லை. ஆனாலும், 30 ஆண்டுகளில் ரூ.500 முதலீடு 750 மடங்கு லாபம் கொடுத்துள்ளது. உண்மையிலேயே இது பெரிய விஷயம்.
இந்த பங்கு சான்றிதழை டிமேட் கணக்கில் வரவு வைப்பது மிகவும் சிக்கலானது. இது தொடர்பாக துறை சார்ந்தவர்களின் ஆலோசனையை கேட்டுள்ளேன். இந்தபங்குகளை நான் விற்க மாட்டேன்” என பதிவிட்டுள்ளார்.