

புதுடெல்லி: அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி முதன் முதலாக தனது கோடீஸ்வர பேத்தியின் படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
கவுதம் அதானியின் மகன் கரண் அதானி. இவரது மனைவி பரிதி. இந்த தம்பதிக்கு பிறந்து 14 மாதங்களேயான காவேரி என்ற பெண் குழந்தை உள்ளது. கவுதம் அதானி தனது பேத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முதலாக எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “எனது பேத்தி கண்களின் பிரகாசத்துடன் ஒப்பிடும்போது உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் மங்கலாகவே தெரிகின்றன’’ என்று வாஞ்சையுடன் கூறியுள்ளார்.
லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் அதானியின் மனைவி மற்றும் பேத்தி காவேரியின் பெற்றோர் சிரித்தபடி உள்ளனர்.
கவுதம் அதானி மேலும் கூறுகையில், “எனது பேத்தியுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். எனக்கு இரண்டு உலகம் மட்டுமே உள்ளது. ஒன்று வேலை மற்றொன்று எனது குடும்பம். எனக்கு வலிமை தரும் சிறந்த ஆற்றல் ஆதாரங்களே அவர்கள்தான். மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக எனது பேத்தி இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் சவால் மற்றும் வாய்ப்புகள் தொடர்பான, ‘ஆற்றல் புரட்சி: அதானி பசுமை ஆற்றல் தொகுப்பு' என்ற தலைப்பில் மார்ச் 26-ல் கண்காட்சி தொடங்கியது. இதில் ‘புதிய அதானி பசுமை ஆற்றல்’ கேலரியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.