Last Updated : 06 Apr, 2018 12:18 PM

 

Published : 06 Apr 2018 12:18 PM
Last Updated : 06 Apr 2018 12:18 PM

றெக்க கட்டி பறக்குது!

ன்னதான் விதவிதமாக பைக்குகளும் கார்களும் விற்பனைக்கு வந்தாலும், எப்போதுமே சைக்கிளுக்கான கெத்து தனிதான். நடுவில் சைக்கிள் மீதிருந்த மோகம் குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அதன் மீது ஈர்ப்பு அதிகரித்திருக்கிறது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சைக்கிள் மீதான மோகம் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. எப்போதுமே சைக்கிள் ‘இளைஞர்களின் அடையாள’மாக இருந்துவருகிறது. சைக்கிள் மீது எப்போதும் இளைஞர்களுக்கு ஈர்ப்பு இருக்க என்ன காரணம்?

முதல் வாகனம்

பெரியவர்களாகி கார், பைக் என எதை ஓட்டினாலும், வாகனம் ஓட்டுவதற்குப் பிள்ளையார்சுழி போடுவது சைக்கிள்தான். முதன்முதலில் கீழே விழுந்து, முட்டியில் சிராய்ப்பு வாங்கி, பேலன்ஸ் செய்து ஓட்டும் முதல் வாகனமும் சைக்கிள்தான். சைக்கிள் சீட்டைப் பிடித்துக்கொண்டு ஓட்டக் கற்றுக்கொடுக்கும் அப்பாவின் கைகள் விடுபடும்போது சுதந்திரமாக சைக்கிள் ஓட்டும் இன்பம் ஒரு தனி சுகம். கரையைத் தொட ஓடி வரும் கடல் அலையைப் போல மனதில் சுதந்திரக் காற்று வீசும். மனதில் தைரியத்தையும் ஏற்படுத்தும்.

பெற்றோர் துணையில்லாமல் பள்ளிக்குச் செல்லவும் வெளியே நண்பர்களுடன் ஊர்சுற்றவும் சைக்கிளும் உற்றத் தோழனாக இருந்தது. பதின் பருவத்தில் ஒரு நண்பனைப் போல மனதுக்கு நெருக்கமான வாகனமாக சைக்கிள் எல்லோருக்குமே இருந்திருக்கும். ஆனால், காலப்போக்கில் சைக்கிள் மீதான ஈர்ப்பு சற்றுக் குறைந்தது. சைக்கிளை காயலான் கடைப் பொருளைப் போல பார்க்கும் நிலையும் வந்தது. ஆனால், அந்தப் போக்கு இன்று மாறிவருகிறது. சைக்கிளை ஒதுக்கி வைத்தவர்கள், அதைத் தேடி வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வீட்டில் பைக், கார் இருந்தாலும் சைக்கிளையும் வாங்கி வைக்கும் போக்குக் கூடியிருக்கிறது. அந்த வகையில்தான் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் சைக்கிள் பயன்பாடு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

நலம் வாழ

சைக்கிள் ஓட்டிகளின் ரசனைக்கு ஏற்ப இன்று சைக்கிள் மாடல்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான சைக்கிள்கள் சந்தையில் வந்தவண்ணம் உள்ளன. பார்ப்பதற்கு ஸ்டைலாகவும் ஓட்டுவதற்கு எளிமையாக இருக்கும்படி அவை வருகின்றன. இளைஞர்களைத் தாண்டி நடுத்தர வயதினருக்கு சைக்கிள் மீது திடீரென ஈர்ப்பு கூடுவதற்கு ஆரோக்கியம் ஒரு காரணம். இந்தக் காலத்தில் உடற்பயிற்சியே செய்யாமல், உடல் நலனைப் பேண ஃபிட்னெஸ் வகுப்புகளுக்கும் ஜிம்முக்கும் இளைஞர்கள் நடையாய் நடக்கிறார்கள். ஆனால், ‘சைக்கிளிங்’ செய்வது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும் என்பதால், சைக்கிள் மீதும் அவர்களின் பார்வை திரும்பியிருக்கிறது.

“சைக்கிளில் கல்லூரிக்குச் சென்றால், ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தனியாக ஃபிட்னெஸ் வகுப்புகளுக்கோ, ஜிம்முக்கோ போக வேண்டிய அவசியம் இருக்காது. நான் பைக்தான் ஓட்டிவந்தேன். ஆனால், என் சகோதரர் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்து, எனக்கும் சைக்கிள் மீது ஆசை வந்தது. தினமும் சைக்கிள் ஓட்டுவது, நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்துவிடுகிறது. இப்போது சைக்கிளில்தான் கல்லூரிக்குப் போகிறேன்” என்கிறார் கோவையைச் சேர்ந்த தினேஷ்.

டிராபிக் பிரச்சினை இல்லை

உடல்நலம் சார்ந்து மட்டுமல்ல, தனிப்பட்ட விருப்பம், ஆரோக்கியம், போக்குவரத்து நெரிசல் என எல்லாவற்றையும் தாண்டி, சூழலை மாசுபடுத்தக் கூடாது என்று நினைக்கும் இளைஞர்களின் தேர்வாகவும் சைக்கிள் மாறிவருகிறது. கல்லூரிக்கோ அலுவலகத்துக்கோ பைக்கில் சென்றுவந்த பலரும், இன்று சைக்கிளில் சென்றுவரும் போக்கு கூடியிருக்கிறது.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்பருமனைக் குறைக்க சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன். தினமும் காலை சூளைமேட்டில் உள்ள வீட்டிலிருந்து மெரினாவரை சைக்கிளில் சென்று வர ஆரம்பித்தேன். பிறகுதான் அலுவலகத்துக்கும் சைக்கிளில் சென்று வரலாமே என்று தோன்றியது. இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்கும் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கும் சைக்கிளில் செல்ல ஆரம்பித்தேன். டிராபிக்கில் வண்டிகள் அணிவகுத்து நின்றால்கூடச் சிறிய சந்துபொந்தில் புகுந்து நான் சென்றுவிடுவேன். இதனால் எனக்கு நேரம் மிச்சமாகிறது. சூழலைக் காக்க என்னால் ஆன ஒரு சிறு உதவி” என்கிறார் சென்னையைச் சேர்ந்த தங்கபிரகாஷ்.

தனி டிராக்

சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் கணிசமானோர் சைக்கிளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதற்குக் காரணம், அங்கே சைக்கிள் ஓட்டுபவர்களுக்கெனத் தனித் தடம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் அந்த நிலை இன்னும் வரவில்லை. சில இடங்களில் அதற்கு முயன்று பார்த்தாலும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை சைக்கிளுக்கான தனித் தடம் என்பது என்பது இன்னும் கனவாகவே இருக்கிறது. இந்த நிலை மாறும்போது இந்தியாவில் சைக்கிள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x