

பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளதை தனது வாடிக்கையாளர்களுக்கு சாக்லேட் கொடுத்து கொண்டாடி உள்ளார் பெங்களூருவை சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவர். அதனை அந்த டாக்ஸி பயணித்த பயணி ஒருவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அந்த அணியின் வீராங்கனைகள் மட்டுமல்லாது ரசிகர்களும் தனித்துவமான வகையில் கொண்டாடினர். ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூரு வீதிகளில் திரண்டு ‘ஆர்சிபி.. ஆர்சிபி..’ என முழக்கமிட்டனர். மாறாத நம்பிக்கை கொண்ட அன்பான ரசிகர்களை ஆர்சிபி அணி பெற்றதன் அழகான வெளிப்பாடு அது.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூரு நகரில் டாக்ஸி ஓட்டுநராக வாழ்வாதாரம் ஈட்டி வரும் நபர் ஒருவர், தனது டாக்ஸியில் பயணித்த வாடிக்கையாளர்களுக்கு சாக்லேட் கொடுத்து கொண்டாடி உள்ளார். அதனை அந்த டாக்ஸியில் பயணித்த எக்ஸ் தள பயனர் ஒருவர் பதிவாக பகிர்ந்துள்ளார்.
“நம்ம பெங்களூருவில் இன்று காலை டாக்ஸியில் பயணித்தேன். அப்போது டாக்ஸி ஓட்டுனரிடம் இருந்து இந்த சாக்லேட் கிடைத்தது. அவர் இன்றைய நாள் முழுவதும் தனது வாடிக்கையாளர்களுக்கு சாக்லேட்களை வழங்குகிறார். ஆர்சிபி பட்டம் வென்றதே இதற்கு காரணம். ஆர்சிபி ரசிகர்கள் வெளிப்படுத்தும் இந்த அன்பு மெய்யான ஒன்று” என அவர் தெரிவித்துள்ளார். அந்த டாக்ஸி ஓட்டுநர் கொடுத்த சாக்லேட் படத்தையும் இந்த பதிவில் அவர் சேர்த்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் ஐபிஎல் 2024 சீசன் தொடங்க உள்ள நிலையில் இந்த வெற்றி நடையை ஆர்சிபி ஆடவர் அணியும் வெளிப்படுத்தினால் இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். வரும் 22-ம் தேதி சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி விளையாடுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது.