

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் அருகே தட்டப்பாறை இடுகாடு உள்ளது. இங்கு 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமத் தாழிகளைக் கொண்ட ஈமக்காட்டை கடந்த வாரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் மாணவி கண்டுபிடித்தார். இதனை ஆய்வு செய்த பேராசிரியர்கள் முருகன் மற்றும் மதிவாணன் இந்த ஈமக்காட்டை ஒட்டி பண்டைய மக்களின் வாழ்விடம் இருக்கும் என கணித்தனர்.
அதன் அடிப்படையில் தொல்லியல் பட்ட மேற்படிப்பு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் பாலசண்முகசுந்தரம், முத்து அருள், இசக்கி செல்வம் ஆகியோருடன் தொல்லியல் துறைத் தலைவர் ( பொறுப்பு ) சுதாகர் மற்றும் பேராசிரியர்கள் களப்பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்த இடுகாட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்விடம் ஒன்றை கண்டு பிடித்தனர். இந்த இடம் கடையம் பேருந்து நிலையத்துக்கு மேற்கே உள்ள தென்பத்து குளத்தின் கரையை அடுத்த செங்கல் சூளை பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது.
இதன் அருகே ராமநதி ஓடுகிறது. இந்த பகுதியின் மேற்பரப்பில் பழமையான உடைந்த கிண்ணங்கள், நொறுங்கிய பானைகள், உடைந்த நிலையில் கைப் பிடியுடன் கூடிய மூடிகள், வேலைப்பாடுடைய பானை வகைகள், தாங்கிகள், தட்டுகள் மற்றும் சட்டிகள் ஏராளமாக சிதறிக் கிடக்கிறன. பானை ஓடுகள் சிவப்பு, கருப்பு மற்றும் கருப்பு சிவப்பு ஆகிய நிறத்தைக் கொண்டவையாக இருந்தன. மூன்று மாணவர்களும் ஏராளமான தொல் பொருட்களைச் சேகரித்தனர்.
அவற்றில் மிகச்சிறிய ஒரு தங்க வளையமும் அடக்கம். மேலும் இவர்கள் தமிழி எழுத்தைத் தாங்கிய பானை ஓடு ஒன்றையும் கண்டுபிடித்தனர். இவற்றை எல்லாம் ஆய்வு செய்த தொல்லியல் பேராசிரியர்களான முருகன் மற்றும் மதிவாணன் பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும் செழித்து ஓங்கி விளங்கிய ஒரு சமூகம் இந்த பகுதியில் 2,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என தெரிவித்தனர். முறையாக ஆய்வு செய்தால் இதன் காலம் மேலும் முன்னோக்கிச் செல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர். ஆய்வில் ஈடுபட்ட தொல்லியல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை துணை வேந்தர் சந்திர சேகர் பாராட்டினார்.