ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து மீண்டு பதிப்பகம் தொடங்கிய ரவிச்சந்திரன்!

புதிதாக தொடங்கியுள்ள காரா பதிப்பகத்தில் ரவிச்சந்திரன்.
புதிதாக தொடங்கியுள்ள காரா பதிப்பகத்தில் ரவிச்சந்திரன்.
Updated on
1 min read

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் விடுதலையான ரவிச்சந்திரன் புதிய பதிப்பகத்தை தொடங்கியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையைச் சேர்ந்த ரா.பெ.ரவிச்சந்திரனும் ஒருவர். இந்த வழக்கில் இவருக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சுமார் 32 ஆண்டு சிறை வாசத்துக்கு பின் 2022 நவம்பர் மாதம் விடுதலையானர்.

சிறையில் இருக்கும் போது சிறையில் செய்த வேலைக்காக தனக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தை ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்கவும், பேரிடர் நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த ஏழு பேரை விடுதலை செய்யக்கோரும் தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானத்தை செயல்படுத்தக்கோரி சிறையிலிருந்தபடி வழக்கு தொடர்ந்தார்.

சிறையிலிருந்து விடுதலையான ரவிச்சந்திரன் ‘காரா’ பதிப்பகம் என்ற பெயரில் புதிய பதிப்பகத்தை மதுரை ஒத்தக்கடை ராஜகம்பீரத்தில் தொடங்கியுள்ளார். இங்கு ரவிச்சந்திரன் எழுதிய புத்தகங்களும், காரா பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்களும் உள்ளன.ரவிச்சந்திரன் கூறுகையில், ‘சிறையிலிருந்து போது வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொண்டேன். சிறையிலிருந்த நாட்களில் 10 புத்தகங்கள் எழுதும் அளவுக்கு தகவல்கள் கிடைத்தன.

முக்கிய கொலை வழக்கில் சிறையில் இருந்ததால் எனது புத்தகத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை. அந்த நேரத்தில் ஏகலைவன் என் புத்தகத்தை துணிச்சலாக வெளியிட்டார். அவரது தூண்டுதல் தான் நான் சொந்த பதிப்பகம் தொடங்க காரணமாக இருந்தது.

சிறையிலிருந்து வெளியே வந்ததும் மக்களிடையே வாசிப்பு பழக்கம் குறைவாக இருப்பதை தெரிந்து கொண்டேன். குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும். இதனால் லாப, நஷ்ட கணக்கு பார்க்காமல் சமூகத்துக்கு பயனாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறையிலிருந்து மீண்டு வந்த பிறகு காரா பதிப்பகம் தொடங்கினேன்.

ராஜீவ் கொலை வழக்கு டாப் சீக்ரெட்டின் 4வது பதிப்பு, சிறை மொழி உட்பட 4 புத்தகங்கள் வெளி வந்துள்ளன. அடுத்த சமகால உலக அரசியலை சொல்லும் நாடக வடிவிலான புத்தகம் வெளிவரவுள்ளது. புத்தகம் எழுதுவதும், வெளியிடுவதும் தொடரும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in